×

குழந்தைகள், தாய்மார்களின் ஊட்டச்சத்தை கண்காணிக்க அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.59 கோடியில் ஸ்மார்ட் போன்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை கண்காணிக்க ரூ.59 கோடி செலவில், ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தையும், ரூ.13.61 கோடி செலவில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்களுக்கு மடிகணினி, உபகரணங்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார். தமிழக அரசு அங்கன்வாடி மையங்கள் மூலம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டையும், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க இணை உணவினையும் வழங்கி  வருகிறது.

இப்பயனாளிகளின் ஊட்டச்சத்து நிலையினை கண்காணிக்க அங்கன்வாடி பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 59 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவிலான காமன் அப்ளிக்கேசன் சாப்ட்வேர் என்ற செயலி பொருத்தப்பட்ட ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைப்பதன் அடையாளமாக, 5 அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு கைபேசிகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இதன்மூலம், பிறந்த குழந்தையின் முதல் 1000 நாட்களை கண்காணித்தல், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற அனைத்து வகையான பதிவுகளும் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டு, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.

ஆதார் கிட்ஸ்: ஆதார் சட்டத்தின் கீழ் அனைவருக்கும் ஆதார் எண் வழங்குவதற்கான பதிவுப் பணிகள் இனி வருங்காலங்களில், அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாகவும் மேற்கொள்ளும் வகையில், 434 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் நிரந்தர ஆதார் பதிவு வசதி ஏற்படுத்தும் வகையில், 13 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவிலான கணினிகள், மடிக்கணினிகள், கைக்கணினிகள், பயோமெட்ரிக் இயந்திரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 1,302 ஆதார் கிட்ஸ்களை 434 குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக 7 குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.  

மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது: ஈரோடு கொடுமுடி வட்டம், காளியபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முத்துகுமார் திருத்துறைப்பூண்டி வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தில், கஜா புயலால் பாதிப்படைந்த மின் விநியோகத்தினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, டிசம்பர் 16ம் தேதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ₹10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Anganwadi ,mothers ,children , Smart phones,Anganwadi workers,monitor,nutritional status,children,mothers,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்