×

சீக்கியர்களுக்கெதிரான கலவர வழக்கில் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காங்கிரஸிலிருந்து விலகல்

டெல்லி: கடந்த 1984ம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் பலர் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகி கொள்வதாக கூறியுள்ளார். கட்சியிலிருந்து விலகும் கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு, சஜ்ஜன் குமார் அனுப்பி வைத்துள்ளார். கடந்த 1984ம் ஆண்டு, பிரதமராக இருந்த இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் எதிரொலியாக நடந்த  கலவரத்தின்போது டெல்லியின் ராஜ்நகரில், சீக்கிய குடும்பத்ைத சேர்ந்த கேகர் சிங், குர்பீரித் சிங், ரகுவேந்தர் சிங், நரேந்தர் பால் சிங் மற்றும் குல்தீப் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஜ்ஜன்குமார் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

விசாரணை நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் சஜ்ஜன் குமார் மீதான குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டது. ஆனால், இதற்கு எதிராக சிபிஐ சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கு நேற்று நீதிபதிகள் முரளிதர் மற்றும் வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமாரை குற்றவாளி என தீர்ப்பு அளித்ததோடு, அவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. சஜ்ஜன் குமார் வருகிற 31ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் அதற்கு முன்னர் டெல்லியைவிட்டு வெளியேறக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருந்த சஜ்ஜன் குமார், அக்கட்சியிலிருந்து தன்னை விடுவித்து கொள்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sajjan Kumar ,Sikhs , Sajjan Kumar, Congress, Sikhs, riots
× RELATED பாகிஸ்தானில் சீக்கியருக்கு அமைச்சர் பதவி