×

தேன்கனிக்கோட்டையில் இருந்து தாவரக்கரை வனப்பகுதிக்கு 70 யானைகள் விரட்டியடிப்பு

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில் முகாமிட்டிருந்த 70 யானைகள், தாவரக்கரை வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு, நேற்று முன்தினம் 70 காட்டு யானைகள், போடிச்சிப்பள்ளி வனப்பகுதி வழியாக வந்தன. ஏற்கனவே, தேன்கனிக்கோட்டை அருகே பேவநத்தம் பகுதியில் 30 யானைகள் முகாமிட்டிருந்த நிலையில், மொத்தம் உள்ள 100 யானைகளும் பல குழுக்களாக பிரிந்து சூரப்பன்குட்டை, வட்டவடிவப்பாறை, போடிச்சிப்பள்ளி பகுதிகளில் முகாமிட்டு வனத்தையொட்டிய கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தன.

இதனிடையே 30 யானைகள் சானமாவு வனப்பகுதியிக்கு திரும்பின. மீதமுள்ள 70 யானைகள் பேவநத்தம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்தன. இந்த யானைகளை மரக்கட்டா வழியாக ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வனச்சரகர் வெங்கடாசலம் தலைமையில் 20 பேர் அடங்கிய வனக்குழுவினர், யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். முத்தூர், ஜார்கலட்டி வழியாக மரக்கட்டா காடு வரை விரட்டி சென்றனர். பின்னர் இரவு தாவரக்கரை வனப்பகுதிக்குள் அந்த யானைகள் விரட்டப்பட்டன. தொடர்ந்து யானைகளை கண்காணித்து வரும் வனத்துறையினர், அவற்றை ஜவளகிரி வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

யானைகளை விரட்டும் வழியில் பயிரிடப்பட்டுள்ள ராகி, துவரை, அவரை, சோளம் பயிர்களை நாசமாக்கி வருவதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒற்றை யானை அட்டகாசம்: நேற்று காலை 10 மணியளவில் லக்கசந்திரம், ஏணிமுச்சந்திரம், பூதுக்கோட்டை பகுதியில் உள்ள வயல்களில், ஒற்றை யானை உணவு தேடி சுற்றி திரிந்தது.

இந்த யானை, கடந்த வாரம் பூதுக்கோட்டை அருகே 2 மாடுகளையும், ஒரு செம்மறி ஆட்டையும் மிதித்து கொன்றது என்பதால், நிலங்களில் ராகி அறுவடை செய்து போர் அமைத்து கொண்டிருந்த விவசாயிகள், ஒற்றை யானையை கண்டு மிரண்டு ஓடினர். இது குறித்த தகவலின் பேரில், அங்கு வந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் பட்டாசு வெடித்து, ஏணிமுச்சந்திரம் காட்டிற்குள் யானையை விரட்டினர். பகல் நேரத்திலேயே உணவு தேடி வயல்களில் சுற்றி வரும் ஒற்றை யானையை, அடர்ந்த காட்டிற்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Forest ,Dhenkanikkottai ,Botanical Forest , Dhenkanikottai, Plantar Forest, Elephants
× RELATED கூடலூர், முதுமலை வனப்பகுதியில் கனமழை..!!