×

கஜா புயல் பாதிப்பு, சபரிமலை சீசனால் தேங்காய் விலை 30% அதிகரிப்பு : மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தகவல்

சேலம்: கஜா புயலால் தென்னை மரங்கள் கடுமையாக பாதித்துள்ளது. அதே நேரத்தில் சபரிமலை சீசனும் தொடங்கியுள்ளதால் தேங்காய் விலை 20 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பெருந்துறை, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னைமரங்கள் அதிகளவில் உள்ளன. இதைதவிர கேரளாவில் தென்னை மரங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் தேங்காய் இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு போதிய மழை இல்லாமல் போனதால், அதன் தாக்கம் 2017ம் தெரிந்தது. அப்போது போதிய தண்ணீர் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் பட்டுபோயின. இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஓரளவுக்கு பருவமழை கை கொடுத்தது. இதன் காரணமாக கடந்த நான்கு மாதமாக தேங்காய் வரத்து அதிகரித்து, விலை சரிந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் வேதாரண்யம், புதுக்கோட்டை, நாகாப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயல் தாக்கியது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்தன. இதனால் தேங்காய் காய்ப்பு சரிந்தது. கார்த்திகை தொடங்கியபின், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தேங்காய் விலை அதிகரித்து வருகிறது. இது குறித்து சேலம் கடைவீதி தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறியதாவது: தென்னை மரங்கள்  நல்ல முறையில் இருந்ததால் தான், அந்தாண்டு காய்ப்பு அதிகமாக இருக்கும். கடந்தாண்டு ஒரளவுக்கு பருவமழை கை கொடுத்தது.

இதன் காரணமாக கடந்த நான்கு மாதமாக தேங்காய் வரத்து அதிகரித்து, விலை சற்று குறைந்து இருந்தது. இந்த நிலையில் கஜா புயலால் தென்னைமரங்கள் கடுமையாக பாதித்துள்ளது. அதே நேரத்தில் சபரிமலை சீசன் காரணமாக தேங்காயின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலையும் அதிகரித்து வருகிறது. தற்போது இருப்பில் உள்ள தேங்காய் விற்பனைக்கு வருகிறது. இதன் தாக்கம் வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தெரியும். கடந்த மாதத்தை ஒப்பிடுகையில், நடப்பு மாதத்தில் 20 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த மாதம் 15க்கு விற்ற ஒரு தேங்காய், நேற்றைய  நிலவரப்படி 20 எனவும், 20க்கு விற்ற தேங்காய் 25 எனவும் உயர்ந்துள்ளது. இவ்வாறு தேங்காய் வியாபாரிகள் கூறினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Caja ,Sabarimala ,Merchants , Gajah storm, coconut, merchants
× RELATED மார்த்தாண்டம் பகுதி ஓட்டல்களில் பணம்...