பிரதமர் மோடி-அதிபர் சாலேஹ் சந்திப்பு மாலத்தீவுக்கு 10,000 கோடி நிதியுதவி

புதுடெல்லி: இந்திய வந்துள்ள மாலத்தீவு அதிபர் இப்ராகிம் சாலேஹ், பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, மாலத்தீவுக்கு இந்தியா ரூ.10,000 கோடி நிதி உதவி அளிப்பதாக மோடி உறுதி அளித்தார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட 4 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மாலத்தீவின் புதிய அதிபராக இப்ராகிம் சாலேஹ் சமீபத்தில் பொறுப்பேற்றார். கடந்த நவம்பர் 17ம் தேதி நடந்த அவரது பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, இப்ராகிம் சாலேஹ் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார். 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தடைந்த அவர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, பிரதமர் மோடி - அதிபர் சாலேஹ் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் இரு நாட்டு வர்த்தகம், உறவு, பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது, மாலத்தீவின் பட்ஜெட் செலவுக்காக இந்தியா ரூ.10,000 கோடி நிதி உதவி வழங்குவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார். மேலும், விசா வசதி உள்ளிட்ட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இது வெற்றிகரமான சந்திப்பாக அமைந்துள்ளது. இரு தரப்பு உறவை பலப்படுத்த வேண்டுமென உறுதி கொண்டுள்ளோம். இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இணைந்து செயலாற்றுவோம். எங்களின் பரஸ்பர நலனை பாதிக்கும் வகையிலான எந்தவொரு நடவடிக்கைக்கும் எங்களின் நாட்டை பயன்படுத்திக் கொள்ள நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மாலத்தீவின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு கடனாகவும், பட்ஜெட் செலவுகளுக்காகவும் இந்தியா ரூ10,000 கோடி  நிதி உதவி வழங்கும். மேலும் மாலத்தீவுடன் வர்த்தகத்தையும் மேம்படுத்த இந்தியா விரும்புகிறது. இதன் மூலம் மாலத்தீவில் இந்திய நிறுவனங்களுக்கு அதிக வர்த்தக வாய்ப்புகளும் பெருகும்’’ என்றார். முந்தைய அதிபர் அப்துல்லா யாமீன் பதவிக்காலத்தில் இந்தியா-மாலத்தீவு உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. நமது அண்டை நாடான மாலத்தீவு, இந்தியாவின் உதவிகளை நிராகரித்து, சீனாவுடன் நெருக்கம் காட்டியது.

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தை இந்தியா எதிர்த்த நிலையில் மாலத்தீவின் அதிபர் யாமீன் அதில் கையெழுத்திட்டார். அதன்பின், மாலத்தீவில் சீனாவில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளுக்கு உதவி செய்தது. இதன் மூலம் சீனாவின் மலிவான தரமற்ற பொருட்கள் மாலத்தீவின் வழியாக இந்திய சந்தைக்கும் நுழையும் என இந்தியா கவலை தெரிவித்தது. இதற்கிடையே, சமீபத்தில் நடந்த தேர்தலில் யாமீன் தோல்வி அடைந்து சாலேஹ் புதிய அதிபரானார். சீனாவின் நிராகரிக்கும் அவர், இந்தியாவுடன் நெருக்கம் காட்டுவதால், மீண்டும் இந்தியா-மாலத்தீவு உறவு புத்துணர்வு பெற்றுள்ளது.

எதற்காக இந்த உதவி?

தென் சீனக்கடல் பகுதிகளை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கும் சீனா, அடுத்ததாக இந்தியப் பெருங்கடலை குறிவைக்கிறது. இதற்காக, பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவு போன்ற சிறு நாடுகளுக்கு உதவி செய்து, அந்நாடுகளின் உதவியால் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நுழைய முயற்சிக்கிறது. இந்த முயற்சிக்கு இந்தியா பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. மாலத்தீவு தற்போது சீனாவிடம் சுமார் ரூ.30000 கோடி கடன் வாங்கி தவிக்கிறது. உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளும் சீன நிறுவனங்களுக்கு மாலத்தீவு இந்த தொகையை தர வேண்டியுள்ளது.  இதற்காக, பிரதமர் மோடி நிதி உதவி தர சம்மதித்துள்ளார். இதனால், மாலத்தீவை சீனா தன் சுயநலத்திற்காகவும், இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகவும் பயன்படுத்திக் கொள்வதை தடுக்க முடியும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ராஜஸ்தானில் கதாகாலேட்சேபம்...