×

ரபேல், மேகதாது அணை விவகாரத்தால் நாடாளுமன்றம் 5வது நாளாக ஒத்திவைப்பு

புதுடெல்லி: ரபேல் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்களும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றம் நேற்று காலை தொடங்கியதும் ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு அரசு தவறான தகவல் தெரிவித்துவிட்டதாக காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவை, மாநிலங்களவையின் மையப் பகுதிக்கு வந்து  கோஷம் எழுப்பினர். ரபேல் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், குற்றம் சாட்டிய ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர்.

இதேபோல், கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தாக்கல் செய்யும்படி கூறிய மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இரு அவைகளின் மையப் பகுதியில் நின்று கோஷம் எழுப்பினர். தமிழகம், கர்நாடகா இடையேயான காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் இரு அவைகளிலும் கூச்சல், குழப்பம் நிலவியது. இந்த அமளியால் மாநிலங்களை தொடங்கிய சிறிது நேரத்தில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்களாக அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருநங்கைகள் உரிமை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்


மக்களவையில் கடும் அமளியால் நேற்று காலை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த அமளிக்கு இடையே முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டு சிறிது நேரம் விவாதம் நடந்தது. இரண்டாவது ஒத்திவைப்புக்குப் பின் மக்களவையில் திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கடும் அமளிக்கு இடையே இந்த விவாதத்தில் 5 எம்.பி.க்கள் பங்கேற்றனர். மசோதாவில் அரசு கொண்டு வந்த 27 திருத்தங்களும், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த சில திருத்தங்களும் பரிசீலிக்கப்பட்டன. பின்னர் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Parliament ,Rafael ,Meghadad , Parliament postponed , 5th day due ,Rafael ,Meghadad dam issue
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...