×

வெள்ளப்பெருக்கால் இடிந்த அணைக்கு பதிலாக முக்கொம்பில் கதவணை கட்ட 387 கோடி ஒதுக்கீடு

சென்னை: திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்த கதவணையின் 48 மதகுகளில் 9 மதகுகள் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இடிந்து விழுந்தது. இதை தொடர்ந்து கொள்ளிடம் வழியாக தண்ணீர் அதிக  அளவு வெளியேறியது. இதை தடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி ₹.96 லட்சம் செலவில் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், முக்கொம்பில் புதிய கதவணை ₹.435 கோடி செலவில் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதை தொடர்ந்து, நீர்வளத்துறை திட்டம் மற்றும் உருவாக்க தலைமை பொறியாளர்  செல்வராஜூ தலைமையில் குழு அமைக்கப்பட்டு, 48 மதகுகளுடன் கூடிய கதவணை அமைப்பது, மதகுகள், இரண்டு சக்கர வாகன போக்குவரத்துடனும்,  கதவணை மற்றும் அனைத்து வாகனங்கள் செல்லும் வசதி என  3வகையான திட்ட அறிக்கை தயார் செய்து, தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதில், தற்போது உள்ள கதவணை போன்று அமைத்தால் கூடுதல் செலவு ஏற்படாது என்பதால், அந்த திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல்
அளித்தது.

இதை தொடர்ந்து, ₹.387.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:திருச்சி முக்கொம்பு மேலணை ஆர்தர் காட்டன் என்பவரால் 1836ல் கட்டப்பட்டது. 182 ஆண்டு பழமையான இந்த அணையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதமடைந்தது. இதையடுத்து அதே இடத்தில் புதிய கதவணை அமைக்க  முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி, ₹.387 கோடி செலவில் புதிய கதவணை அமைக்கப்படுகிறது. இந்த புதிய அணையில் 2 லட்சத்து 83 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்ற முடியும். (ஏற்கனவே இருந்த  கதவணையில் இருந்து 2 லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்ற முடியும்) இந்த புதிய அணையால் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவா₹ர், அரியலூர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 12 லட்சத்து 58 ஆயிரத்து 460 ஏக்கர்  நிலம் பாசன வசதி பெறும். இந்த கதவைணயில் 55 மதகுகள் அமைக்கப்படுகிறது. பழைய அணையில் 48 மதகுகள் இருந்தன.  கதவணைக்கு மேல் இரு சக்கர வாகனங்கள் பயணிக்கும் வகையில் சாலை அமைகிறது. இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து தற்போது பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 30ம் தேதி ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்படுகிறது. பிப்ரவரி முதல் கட்டுமான பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது  என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பழைய கதவணையில் இருந்து 75 மீ. கீழ் திசையில் அமையும்
முக்கொம்பில் புதிதாக கட்டப்படவுள்ள கதவணை, ஏற்கனவே உடைந்த அணையில் இருந்து கீழ் திசையில் 75 மீட்டர் தொலைவில் கட்டப்படுகிறது. இந்த கதவணை கட்டி முடித்த பிறகு பழைய கதவணையை இடிக்கவும் முடிவு  செய்யப்பட்டுள்ளது. ₹155 கோடியில் புதிய மதகுகள், ₹8 கோடியில் கதவணை மேல்பகுதியில் ஒரு வழி பாலம், ₹20 கோடியில் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் சுவர்கள் அமைக்கப்படுகிறது. புதிய கதவணை கட்டுமான  பணியை 12 மாதத்தில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : mogul ,dam , Instead , flooding damaged dam, 387 crore, gate
× RELATED கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை...