×

போரூரில் பரபரப்பு சம்பவம் நைஜீரியா வாலிபர் உள்பட 2 பேர் துப்பாக்கி முனையில் கைது: மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்தது அம்பலம்

சென்னை: போரூரில் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த நைஜீரிய நாட்டு வாலிபர் உள்பட இருவரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர். சென்னை மதுரவாயல் - தாம்பரம் செல்லும் பைபாஸ் சர்வீஸ் சாலை, போரூர் அருகே கடந்த 14ம் தேதி கொகைன் விற்கப்படுவதாக அடையாறு போலீஸ் துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு சாதாரண உடையில் சென்று கொகைன் வாங்குவதைபோல நடித்தனர். அவர்களை வாடிக்கையாளர்கள் என கருதிய நபர் போலீசாருக்கே கொகைன் விற்றான்.  உடனடியாக அவனை பிடித்த போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தனர். அதில், கொகைன் விற்ற வாலிபர் மதுரவாயலைச் சேர்ந்த  குமரேசன்(26) என்பது தெரியவந்தது. அவனை போலீசார் கைது செய்து அவனிடம் இருந்து ₹70  ஆயிரம் மதிப்புள்ள 22 கிராம் கொகைனை பறிமுதல் செய்தனர். பின்னர் மேல் விசாரணைக்காக போரூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இந்நிலையில் அம்பத்தூர் துனை கமிஷனர் ஈஸ்வரன், போரூர் உதவி கமிஷனர் சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் சங்கர் நாராயணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து பிடிபட்ட குமரேசனிடம் தீவிர விசாரணை  செய்து வந்தனர்.

அவருக்கு கொகைன், தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை சப்ளை செய்தவர் யார்? எங்கிருந்து வருகிறது. இதில் ஈடுபட்டிருக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தனர்.  விசாரணையில் நைஜீரியாவைச் சேர்ந்தவரிடமிருந்து வாங்கியதாக குமரேசன் தெரிவித்திருந்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் போரூர் பைபாஸ் சர்வீஸ் சாலையோரம் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்  குமரேசன் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு போதை பொருட்களை சப்ளை செய்த நைஜீரியா நாட்டை  சேர்ந்த வாலிபர் மற்றும் ஆவடியைச் சேர்ந்த அருண்திவாகர் ஆகிய இரண்டு பேர் வந்தனர். அங்கு மாறு வேடத்தில் இருந்த போலீசார் இருவரையும் மடக்கி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த நைஜீரிய நபர் போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றார். உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார்  துப்பாக்கி முனையில் நைஜீரிய நாட்டை சேர்ந்த சுக்வு சைமன் ஒபீனா(30), என்ற வாலிபரை கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த ஆவடியை சேர்ந்த அருண்திவாகர்(33), என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து  தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கொகைன் மற்றும் எக்ஸ்டாசி  எனும் 500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘’குமரேசன் ஆரம்ப நாட்களில் அடிக்கடி கோவா சென்று வருவார். அப்போது அங்கு நைஜீரிய நாட்டு  வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டு இவனது தேவைக்காக கொகைன் மற்றும் தடை செய்யப்பட்ட எக்ஸ்டாசி எனும் மாத்திரைகளை வாங்கி உபயோகித்து வந்துள்ளான். பின்னர் போதை கும்பல் குமரேசனை மூளை சலவை செய்து  போதை மாத்திரைகளை மொத்தமாக கொடுத்து விற்பனை செய்து கொடுத்தால் கமிஷன் கொடுப்பதாக கூறியதையடுத்து கடந்த சில மாதங்களாக தனது நண்பர் அருண்திவாகர் உதவியுடன் இந்த போதை மாத்திரைகளை வாங்கி  விற்பனை செய்து வந்துள்ளார். அதற்கு சாதாரண குடியிருப்புகள் இருக்கும் இடத்தில் வைத்து விற்பனை செய்தால் போலீசார் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து போதை  மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளான்.

இதில் குறிப்பாக சினிமா துறையை சார்ந்தவர்கள், இரவு நட்சத்திர விடுதிகளில் நடனம் ஆடுபவர்கள், பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் பார்ட்டி கொடுப்பவர்கள் என பல தரப்பினரிடம் இந்த போதை மாத்திரைகளை விற்பனை  செய்து வந்துள்ளார். இந்த ஒரு மாத்திரை சுமார் ₹500 முதல் ₹3ஆயிரம் வரை விற்பனை செய்து வந்துள்ளார். இந்த மாத்திரையை சாப்பிட்டால் வாசனை வராது. இதனால் வீட்டிலோ வெளியிலோ போதை மாத்திரை  சாப்பிட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாது. பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கொகைன் மதிப்பு சுமார் ₹10 லட்சம் இருக்கும் என தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட குமரேசன், அருண் திவாகர், நைஜீரிய நாட்டு வாலிபர் சுக்வு சைமன் ஒபீனா  ஆகியோருக்கு சர்வதேச போதை கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nigerian , Thriller,Nigerian, youth, gunpoint,students
× RELATED நைஜீரிய தீவிரவாதிகள் கடத்திய 300 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு