×

மும்பையின் அந்தேரியில் உள்ள மருத்துவமனையில் பயங்கர தீ 6 பேர் பலி: 147 பேர் காயம்

மும்பை: அந்தேரி கிழக்கு எம்.ஐ.டி.சி. பகுதியில் இ.எஸ்.ஐ.சி. எனப்படும் தொழிலாளர் மருத்துவமனை உள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் இந்த மருத்துவமனை கட்டிடத்தின் 4வது மாடியில் உள்ள ஆபரேஷன் தியேட்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் 12 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து உடனடியாக களமிறங்கி தீயை அணைக்க பாடுபட்டனர். தீயணைப்பு படையினரின் தீவிர முயற்சியால் இரண்டு மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், தீப்பிடித்த மருத்துவமனை மாடிகளில் வெப்பத்தை தணிக்க தீயணைப்பு படையினர் தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தனர். இந்த விபத்தில் மருத்துவமனை கட்டிடத்தின் இரண்டு மாடிகள் பலத்த சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் அந்த இடத்திலேயே பலியானார். காயமடைந்த மற்ற 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

தீயில் சிக்கியும், கீழே விழுந்தும், புகை மண்டலத்தால் மூச்சுத்திணறால் ஏற்பட்டும் 147 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரையும் தீயணைப்பு படையினர் மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 11 பேருக்கு கூப்பர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 23 பேர் ஜோகேஸ்வரியில் உள்ள பாலாசாகேப் தாக்கரே மருத்துவமனையிலும், 40 பேர் அந்தேரி கிழக்கில் உள்ள ஹோலி ஸ்பிரிட் மருத்துவமனையிலும், 30 பேர் மரோலில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மும்பை மாநகராட்சியின் பேரிடர் மேலாண் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனையின் 4வது மாடியில் உள்ள ஆபரேஷன் தியேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நேரிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த விபத்து குறித்து எம்.ஐ.டி.சி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hospital ,Andheri , 6 dead , hospital ,Andheri hospital
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி...