×

ஆதம்பாக்கம் - மேடவாக்கம் சாலையில் திறந்த நிலை கால்வாயால் வாகன ஓட்டிகள் தவிப்பு

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் - மேடவாக்கம் சாலையில் கீழ்க்கட்டளை அருகே திறந்த நிலையில் உள்ள கால்வாயால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் உள்ளது.  ஆதம்பாக்கத்தில் இருந்து மேடவாக்கம் வரை செல்லும் மேடவாக்கம் பிரதான சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலையை அகலப்படுத்தும் பணி பல மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆனால், இதுவரை முடிக்கப்படாமல் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு காலை, மாலை நேரங்களில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

அசவர காலத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட விரைந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இச்சாலையில், கீழ்க்கட்டளை அருகே பெட்ரோலிய நிறுவனத்திற்கு அருகில் மழைநீர் வெளியேறும் வகையில், சிமென்ட் பைப் மூலம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கனமழை பெய்தபோது, மழைநீர் வெளியேற வசதியாக இந்த சிமென்ட் பைப் உடைக்கப்பட்டது. ஆனால், இதுவரை சீரமைக்கவில்லை. இதனால், தற்போது சாலையோரம் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இங்கு தடுப்புகள் கூட ஏதும் வைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

அந்த பகுதியில் மின்விளக்கு கூட இல்லாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்து பீதியில் செல்கின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், இந்த பகுதியில் கான்கிரீட் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : motorists ,road ,Medavakkam , Evaporation, meditation, road, canal
× RELATED திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி