×

இரட்டை சதம் விளாசினார் டாம் லாதம் நியூசிலாந்து 578 ரன் குவிப்பு: இலங்கைக்கு நெருக்கடி

வெலிங்டன்: இலங்கை அணியுடனான முதல் டெஸ்டில் டாம் லாதம் அபாரமாக விளையாடி இரட்டை சதம் விளாசியதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன் குவித்தது. பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில் டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச, இலங்கை அணி முதல் இன்னிங்சில் 282 ரன்னுக்கு ஆட்டமிழந்தது (90 ஓவர்). கருணரத்னே 79, ஏஞ்சலோ மேத்யூஸ் 83, டிக்வெல்லா ஆட்டமிழக்காமல் 80 ரன் விளாச, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். நியூசிலாந்து பந்துவீச்சில் டிம் சவுத்தீ 6, வேக்னர் 2, போல்ட், கிராண்ட்ஹோம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து, 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 311 ரன் எடுத்திருந்தது. கேப்டன் வில்லியம்சன் 91 ரன், ராவல் 43 ரன்னில் ஆட்டமிழந்தனர். டாம் லாதம் 121 ரன், ராஸ் டெய்லர் 50 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். டெய்லர் மேற்கொண்டு ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். லாதம் - நிகோல்ஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 114 ரன் சேர்த்தது. நிகோல்ஸ் 50 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த வாட்லிங் டக் அவுட்டானார். கிராண்ட்ஹோம் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, லாதம் இரட்டை சதத்தை நிறைவு செய்து அசத்தினார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 73 ரன் சேர்த்தது. கிராண்ட்ஹோம் 49 ரன் எடுக்க, அடுத்து வந்த சவுத்தீ 6, வேக்னர் 0, அஜாஸ் பட்டேல் 6, போல்ட் 11 ரன்னில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து 157.3 ஓவரில் 578 ரன் குவித்து ஆல் அவுட்டானது.

தொடக்க வீரர் டாம் லாதம் 264 ரன்னுடன் (489 பந்து, 21 பவுண்டரி, 1 சிக்சர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை பந்துவீச்சில் லாகிரு குமாரா 4, தில்ருவன் பெரேரா, தனஞ்ஜெயா டிசில்வா தலா 2, லக்மல் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 296 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 20 ரன் எடுத்துள்ளது. குணதிலகா 3, கருணரத்னே 10, தனஞ்ஜெயா டிசில்வா (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர். குசால் மெண்டிஸ் 5 ரன், மேத்யூஸ் 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 7 விக்கெட் இருக்க, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 276 ரன் தேவை என்ற நிலையில், இலங்கை அணி இன்று 4ம் நாள் சவாலை சந்திக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tom Latham ,578 ,innings , இரட்டை சதம் , டாம் லாதம், நியூசிலாந்து,இலங்கை
× RELATED 178 ரன்னில் சுருண்டது வங்கதேசம் இலங்கை வலுவான முன்னிலை