×

வடசேரி பஸ் நிலையத்தில் நகராட்சி வசமிருந்த வாகன பார்க்கிங் மீண்டும் தனியாரிடம் ஒப்படைப்பு

நாகர்கோவில்: வடசேரி பஸ் நிலையத்தில் நகராட்சி வசமிருந்த வாகன பார்க்கிங்கை மீண்டும் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால் கட்டணம் ரூ. 5ல் இருந்து ரூ.10 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
நாகர்கோவில் நகராட்சி கமிஷனராக கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பொறுப்பேற்ற  சரவணக்குமார் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறிப்பாக நகரின் மைய பகுதியில் இருந்த பெட்ரோல் பங்க்,  டாக்சி ஸ்டாண்ட் மற்றும் வடசேரி சந்தை பகுதியில் இருந்த கடைகள் உள்ளிட்டவற்றை அதிரடியாக அகற்றினார். மேலும் நகராட்சி பூங்காவை சுற்றி தனியார் பங்களிப்புடன் ரூ.40 லட்சம் செலவில் சுற்றுசுவரும் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

கமிஷனர் சரவணக்குமாரின் இந்த அதிரடி நடவடிக்கைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. அனைத்து தரப்பினரும் அவரை பாராட்டினர். அந்த வகையில் வடசேரி பஸ் நிலையத்தில் தனியார் ஒருவர் குத்தகை எடுத்து நடத்தி வந்த பார்க்கிங்கை, நகராட்சியே மீண்டும் நடத்தும் என அதிரடியாக அறிவித்த கமிஷனர் சரவணக்குமார், அதன்படி குத்தகையை ரத்து செய்து நகராட்சி பணியாளர்களை வைத்து பார்க்கிங் கட்டணம் வசூலித்தார். நகராட்சி கைவசம் வந்த பின்னர் பார்க்கிங் கட்டணம் ரூ.5 ஆக குறைக்கப்பட்டது.இதனால் அதிகம் பேர் நகராட்சி பார்க்கிங் நிலையத்துக்கு சென்று தனது இரு சக்கர வாகனங்களை நிறுத்தினர். ஏற்கனவே வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள மற்ற பார்க்கிங் நிலையங்களில் ரூ.10 , ரூ. 8 என கட்டணம் வசூலிக்க, நகராட்சி மட்டும் ரூ.5 வசூலித்ததால், அதற்கும் நகராட்சி கமிஷனருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இதே போல் வடசேரி ஆம்னி பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பிடத்தை இலவசமாக மாற்றியும் கமிஷனர் சரவணக்குமார் நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்த நிலையில் தற்போது திடீரென, வடசேரி பஸ் நிலையத்தில் நகராட்சி நடத்தி வந்த பார்க்கிங், மீண்டும் தனியாருக்கே குத்தகைக்கு விடப்பட்டு உள்ளது. மேலும் கட்டணமும் ரூ. 5ல் இருந்து ரூ.10 ஆக அதிகரித்துள்ளனர். ஏல தொகையை அதிகரித்து கேட்டதால் தனியாருக்கு குத்ததைக்கு விடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த பார்க்கிங் நிலையத்தில் வழங்கப்படும் ரசீதில் பார்க்கிங் கட்டணம் அச்சிடப்பட வில்லை. நாகர்கோவில் நகராட்சி இரு சக்கர பாதுகாப்பு நிலையம் என்ற பெயரில் தான் ரசீது வழங்கப்படுகிறது. திடீரென பார்க்கிங் கட்டணத்தை ரூ.10 ஆக உயர்த்தி இருப்பது வாகனம் நிறுத்துபவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நகராட்சிக்கு வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக கமிஷனர் சரவணக்குமார் மீண்டும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் உரிமையை தனியாருக்கு குத்தகைக்கு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

குத்தகை தொகை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே 6 மாதம் நகராட்சி நடத்துவது போல் நடத்தி விட்டு, தொகை அதிகமாக நிர்ணயித்து தனியாருக்கு கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறுகின்றனர். பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில் தவறில்லை. முறைப்படி அதற்கான ரசீது வழங்கியும் மற்றும் எத்தனை மணி நேரத்துக்கு கட்டணம் என்பன போன்ற விபரங்களை முறையாக எழுதி வைத்தும் வசூலிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை ஆகும். கமிஷனர் சரவணக்குமார் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்வாரா? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : municipality ,bus station ,Vadasseri , Vadasseri bus stand, municipality, vehicle parking, private
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்