×

கோட்டூர் அருகே கஜா புயலால் வீட்டை இழந்த தாயில்லா மாணவிகளுக்கு புதிய வீடு : முகநூல் நண்பர்களால் கிடைத்தது

மன்னார்குடி: கோட்டூர் அருகே கஜா புயலால் வீட்டை இழந்த தாயில்லா மாணவிகளுக்கு புதிய வீடு முகநூல் நண்பர்களால் கிடைத்தது. திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மேல கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (40). விவசாய கூலித்தொழிலாளி.  இவரது மனைவி ராஜலட்சுமி (32). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.  இவர்களுக்கு விசோனியா (12), வினிதா (11) ஆகிய 2 பெண் குழந்தைகள். இவர்கள் அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வந்தனர். ராஜீவ்காந்தி  சிறு வயதிலேயே தாயை இழந்த 2 பெண் குழந்தைகளுடன்  குடிசை வீட்டில் வசித்து வந்தார்.  இந்நிலையில் கடந்த மாதம் 15 ம் தேதி வீசிய கஜா புயலின் கோரப்பிடியில் சிக்கி மாணவிகளின் சிறிய குடிசை வீடு முற்றிலும் சேதமடைந்தது.

ஏற்கனவே வறுமையில் வாழ்ந்து வந்த மாணவிகள் தங்க இடமின்றி இடிந்த கூரை வீட்டின் ஓரத்திலேயே வசித்து வந்தனர். குடும்பத்தை கவனிக்க வேண்டிய மாணவிகளின் தந்தையோ தினமும் மது அருந்தி விட்டு தனது குழந்தைகளை கவனிக்காமல் சுற்றித்திரிந்தார்.  இவர்களின் சோகத்தை எந்த ஒரு அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.  ஏழ்மை நிலையில் இருந்தாலும் மாணவிகள் இருவரும் படிப்பில் படுசுட்டியாக இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர்களின் பள்ளி இயங்க துவங்கியது. கவலைகள் ஒருபுறம் இருந்தாலும் பள்ளிக்கு சென்றால் ஒரு வேளை மத்திய உணவாவது கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் வழக்கமாக பள்ளிக்கு சென்றனர்.

மாணவிகள் இருவரின் முகங்களும் சோகமாக இருப்பதை கண்ட அப்பள்ளி யின் ஆசிரியர் மணி கணேசன் அதுகுறித்த மாணவிகளிடம் விசாரித்துள்ளார். அப்போது இரு மாணவிகளும் தங்களின் வேதனையை கண்ணீருடன் கூறினர். இதனை கேட்டு கண்கலங்கிய ஆசிரியர் மணிகணேசன் உடனடியாக தனது முகநூல் பக்கத்தில் மாணவிகளின் நிலைமையை பதிவாக்கினார். அதனை முகநூலில்  பார்த்த பலரும் வார்த்தைகளால் மட்டுமே மாணவிகளுக்கு ஆறுதல் கூறியிருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு பிரபலமான மோட்டார் கம்பெனியில் வேலை பார்க்கும் 6 நண்பர்கள் இணைந்து பகிர்ந்துண்ணும் காக்கைகள் நண்பர்கள் குழு என்ற பெயரில் முகநூலில் குழுவாக இயங்கி வந்த அவர்களிடம் மாணவிகள் குறித்தான ஆசிரியர் மணி கணேசனின் முகநூல் பதிவு சென்றடைந்தது. பின்னர் ஆசிரியர் மணி கணேசனை தொடர்பு கொண்ட அவர்கள் மேல கண்டமங்கலம் கிராமத்திற்கு உடனடியாக  நேரில் வந்து  மாணவிகளின்  இடிந்த கூரை வீட்டை பார்வை யிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறியதனுடன் ரூ.50 ஆயிரம் மதிப்பில் 10 நாட்களுக்குள் எளிமையான வீடு ஒன்றை மாணவிகளுக்கு கட்டிக்
கொடுத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : mothers ,home ,storm ,Kattur ,Kaja , KOTUR, GAZA storm, house
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு