×

ஆலங்குடி பகுதியில் கஜா புயல் தாக்கி ஒரு மாதமாகியும் மின்சாரமின்றி இருளில் மூழ்கிய கிராமங்கள் : பொதுமக்கள் பரிதவிப்பு

ஆலங்குடி: ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் கஜா புயல் கோரத்தாண்டவத்தின் பாதிப்பு ஒருமாத காலமாகியும் இன்னும் சீராகவில்லை. மின்சாரம் இல்லாமலும், நிலத்தில் வீழ்ந்து கிடக்கும் தென்னை, பலா, வாழை, தேக்கு, சந்தனம் உள்ளிட்ட மரங்களை அகற்ற முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில், இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட கஜா புயலின் பாதிப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மட்டுமல்லாமல், எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றிவிட்டது.

ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், அணவயல், புள்ளான்விடுதி, நெடுவாசல். மேலாத்தூர், கீழாத்தூர், அரையப்பட்டி, பள்ளத்திவிடுதி, வம்பன், திருவரங்குளம் உட்பட பல்வேறு பகுதிகளிலும், அதேபோல், கறம்பக்குடி தாலுகாவிற்குட்பட்ட மாங்கோட்டை, தெற்குத்தெரு, கருக்காகுறிச்சி, வாணக்கன்காடு, வாண்டான்விடுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களும் கஜா புயலால் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. மேலும், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வந்த நீண்ட கால பயிரான தென்னை கிட்டத்தட்ட முற்றிலும் சேதமடைந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் கூலி தொழிலாளி முதல் முதலாளிகள் வரை அனைத்து தரப்பினரும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த பாதிப்பால் விவசாயிகளுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அந்த தாக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை.


நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் போராட்ட எதிர்ப்புக்குழுவைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி கூறுகையில், கஜா புயல் தாக்கி ஒருமாத காலமாகியும் இதுவரையில் மின்விநியோகம் கொடுக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு கிராமங்களில் மின்சாரமின்றி குடிநீர் கிடைக்காமலும், இருளில் பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும், தென்னை, பலா, தேக்கு, வாழை, முந்தரி, சந்தனம் உள்ளிட்ட மரங்கள் முற்றிலும் சாய்ந்து விவசாயிகளுக்கு ரூ.பல கோடி இழப்பு ஏற்பட்ட நிலையில், மீதமுள்ள நெல், காய்கறி, பூ, கடலை உள்ளிட்ட பயிர்களை காப்பாற்ற மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், மின்வாரியத்தினர் இதுவரை மின்சாரம் கிடைப்பதற்கான எந்தவிதமான ஆக்க பணிகளிலும் ஈடுபடாமல் உள்ளனர். மேலும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த மின் பணியாளர்கள் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு சென்று விட்டதால், மின்சாரம் வழங்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கஜா புயலின் தாக்கத்திலிருந்து தப்பித்த பயிர்களையும் காப்பாற்ற போராடி வருகின்றனர். எனவே, மின்சாரம் கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Villages ,area ,kazha storm ,Alangudi , Alangudi, Gaza storm, villages
× RELATED கர்நாடகாவில் இவிஎம் உடைக்கப்பட்ட...