×

மார்கழி மாதப் பிறப்பையொட்டி நெல்லையில் பஜனை ஊர்வலம் : சிறுவர்கள் திரளாக பங்கேற்பு

நெல்லை: மார்கழி மாதம் பிறந்துள்ளதை அடுத்து நெல்லை மாநகரின் பல்வேறு இடங்களில் பஜனை ஊர்வலம் நடந்தது. இதில் சிறுவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பொதுவாக தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கு தனிச் சிறப்பு உள்ளது. அத்தகைய சிறப்பான மாதங்களில் சிறந்ததாக மார்கழி மாதம் திகழ்கிறது. ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று பகவத்கீதையில் பகவான் கிருஷ்ண பரமாத்மாவால் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்புமிக்க மார்கழி மாதம் நேற்று பிறந்தது. இதையடுத்து நேற்று அதிகாலையிலேயே பெண்கள் எழுந்து நீராடி வீட்டின் முன் மாவினால் கோலமிட்டு அருகேயுள்ள பெருமாள் மற்றும் சிவன் கோயில்களுக்கு சென்று வழிபட்டனர்.

இதேபோல் வீடுகளில் உள்ள சிறுவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பக்தர்களும் அதிகாலையில் எழுந்து நீராடி மார்கழி மாத பஜனையில் பங்கேற்று வழிபட்டனர். மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் கோயில்கள் முன்பாக புறப்பட்ட பஜனை குழுவினர் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடியவண்ணம் வீதிகளை வலம் வந்தனர். மார்கழி மாதப் பிறப்பையொட்டி தச்சநல்லூரில் திருநாவுக்கரசர் பஜனை குழுவினர் அதிகாலையில் எழுந்து நீராடி தச்சநல்லூர் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் இருந்து திருப்பாவை மற்றும் திருவெம்பாடல்களை பாடியபடி வீதிகளை வலம்வந்தனர்.  

முதலில் சுவாமி, அம்பாளை வணங்கிய பஜனை குழுவினர், சந்தனமாரியம்மன் கோயில், கற்பக விநாயகர் கோயில், மூளி விநாயகர் கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில், வரந்தரும் பெருமாள் கோயில், வெற்றி விநாயகர் கோயில் வெள்ளி விநாயகர் கோயில், வழிவிடு விநாயகர் கோயில், இரட்டை விநாயகர் கோயில், வேதமூர்த்தி, மந்திரமூர்த்தி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். நிறைவாக மீண்டும் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலை வந்தடைந்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இதில் கல்யாணசுந்தரம் பிள்ளை தலைமையில் சிவநேச செல்வர்கள் திரளாகப் பங்கேற்றனர். தொடர்ந்து தை மாதப் பிறப்பு வரை பஜனை நடைபெறுகிறது. இதே போல் நெல்லை மேலநத்தம் பகுதியில் ராதை கிருஷ்ணர் பஜனை குழுவினரும், நெல்லை டவுன் தொண்டர் நயினார் கோயில் திருப்புகழ் பஜனை குழுவினரும், டவுண் சென்பகம்பிள்ளை தெரு பஜனை குழுவினரும் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடியபடி வீதிகளை வலம் வந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bajan , margali, Tirunelveli, bhajanai
× RELATED அசாமின் பாக்ஜன் எரிவாயுக் கிணற்றில் 5...