×

ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட்....... துணை முதல்வரானார் சச்சின் பைலட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் பதவியேற்றுக்கொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஆளுநர் கல்யாண் சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஐ.மு.கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்பே, முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படாததால், புதிய முதல்வர்களை தேர்வு செய்வதில் கடும் போட்டி ஏற்பட்டு குழப்பம் நிலவியது. சச்சின் பைலட்டை முதல்வராக அறிவிக்க கோரி ராஜஸ்தானில் நேற்று வன்முறை ஏற்பட்டது. ஆனால் அசோக் கெலாட்டை அறிவிக்க வேண்டும் என மூத்த தலைவர்ளும், சோனியா காந்தியும் கூறினர். இதனால் இருதரப்பையும் சமாதானம் செய்ய ராகுல் முடிவு செய்தார். இதையடுத்து அசோக் கெலாட்டை ராஜஸ்தான் முதல்வராகவும், சச்சின் பைலட்டை துணை முதல்வராகவும் அறிவித்தார்.

3-வது முறை முதல்வரானார் அசோக் கெலாட்
ராஜஸ்தானில் கடந்த 1998ம் ஆண்டு மற்றும் 2008ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதும் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. அப்போதும் தனக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜாட் தலைவர்களை தோற்கடித்து வெற்றி முதல்வரானார் அசோக் கெலாட். இவர் மாலி இனத்தை சேர்ந்தவர். ஜாட் இனத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிஸ் ராம் ஓலாவை முதல்வராக தேர்வு செய்யும்படி கடந்த 2008ம் ஆண்டு நெருக்கடி கொடுக்கப்பட்டது.

இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் பரிந்துரை செய்ததால், அப்போது அசோக் கெலாட்டை முதல்வராக சோனியா அறிவித்தார். ஆனால் இந்த முறை மாநில காங்கிரஸ் தலைவரையே போட்டியில் எதிர்கொள்ள நேரிட்டது. இதிலும் மூத்த தலைவர்கள் மற்றும் சோனியா ஆதரவுடன் 3வது முறையாக முதல்வராகியுள்ளார் அசோக் கெலாட்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ashok Gehlot ,Rajasthan ,vice-chief ,Sachin Pilot , Ashok Gehlot, Sachin Pilot, Rajasthan, Congress, Rahul Gandhi, MK Stalin
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்