×

நெடுஞ்சாலைத் துறை அலட்சியத்தால் 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அண்ணனூர் ரயில்வே மேம்பால பணி: விபத்தில் சிக்கும் மக்கள்

ஆவடி: ஆவடி அருகே அண்ணனூர் ரயில்வே மேம்பால பணிகள் 8 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிப்பட்டு உயிர் பலியாவது அதிகரித்து வருகிறது.  சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் ஆவடி அருகே அண்ணனூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதை சுற்றி திருமுல்லைவாயல், அண்ணனூர், அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மூன்று நகர், ஜோதி நகர், சிவசக்தி நகர், ஜெ.பி.எஸ்டேட், சோழன் நகர், ஸ்ரீசக்தி நகர், பல்லவன் நகர், வைஷ்ணவி நகர், ரெட்டிபாளையம், கோணாம்பேடு உள்ளிட்ட பல நகர்கள் உள்ளன.

இப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார், அரசு ஊழியர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும்  அண்ணனூர் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அண்ணனூர் ரயில்வே கேட்டை கடந்து தான் அயப்பாக்கம், திருவேற்காடு, அம்பத்தூர், ஆவடி பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
இந்த ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், காலை, மாலை நேரங்களில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் தண்டவாளத்தை கடந்து செல்பவர்களில் பலர் ரயில் மோதி இறந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் ரயிலில் அடிப்பட்டு நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர்.

இப்பிரச்னைக்கு தீர்வாக அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது. அதன்படி, மத்திய, மாநில அரசுகள் இணைந்து திருமுல்லைவாயல் - அண்ணனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ₹15.6 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2010ம் ஆண்டு ரயில்வே பாதையில் தொடங்கியது. கடந்த 2012ம் ஆண்டு ரயில்வே தண்டவாள பகுதியில் மேம்பாலம் கட்டும் பணியும் முடிவடைந்தது.

பின்னர், மாநில அரசு செய்ய வேண்டிய மேம்பாலப் பணிகள் ஆரம்பிக்கப்படாமல் கடந்த  6 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பலமுறை மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், அப்பகுதியில் நெரிசல் மற்றும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,  ‘‘கடந்த 8 ஆண்டுக்கு முன் தொடங்கப்பட்ட மேம்பால பணி இதுவரை முடிக்கப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. இதற்கான நிலங்களை கையப்படுத்திய பிறகும், நெடுஞ்சாலை துறையினர் பணிகளை துரிதப்படுத்தாமல் உள்ளனர். இதனால் ரயில்வே கேட்டை கடக்கும் போது அடிக்கடி பொதுமக்கள் ரயிலில் சிக்கி உயிரிழக்கின்றனர். நத்தை வேகத்தில் நடைபெறும் பணிகளுக்கு ஒட்டு மொத்த அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம்,’’ என்றனர்.

மேலும் 2 ஆண்டு
நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘அண்ணனூர் மேம்பாலப் பணிக்கு ஆரம்ப காலத்தில் பொதுப்பணித்துறை, வீட்டுவசதி வாரியம் மூலம் நிலம் ஆர்ஜிதம் செய்ய காலதாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து, மேம்பால பணிக்காக மண் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், பாலப்பணிக்காக வடிவமைப்பு செய்யப்பட்டு உரிய ஒப்புதல் பெறப்பட்டு 2017ம் ஆண்டு செப்டம்பரில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. மேற்படி திட்ட வடிவமைப்பில் ஒப்பந்ததாரர் சில திருத்தங்களை கோரியதின் பேரில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. புதிய வடிவமைப்பு இன்னும் இரு மாதங்களில் சமர்பிக்கப்படும். இதன் மூலமாக திட்ட வடிவமைப்பில் குறைவான பொருளாதாரத்தில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. மேலும், பாலத்தின் இருபுறமும் 200 மீட்டர் அளவில் கட்டி முடிக்கப்படும். இந்நிலையில் இப்பணிகளை முடித்திட மேலும் 2 ஆண்டுகள் ஆகலாம்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Annanur Railway ,crash , Annanur Railway,sponsorship,work,six years,highways department,negligence,people,
× RELATED இருசக்கர வாகன விபத்தில் சிக்கி பாஜக நிர்வாகி பலி..!!