×

பாஜ ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ரபேல் விமான ஒப்பந்தத்தில் எந்த இடைத்தரகர் பங்குமில்லை ரேபரேலி தொகுதியில் பிரதமர் மோடி காட்டமான பதிலடி

ரேபரேலி: ‘‘பாஜ ஆட்சியில் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்ட ராணுவ ஒப்பந்தங்களில், ‘குட்ரோச்சி’, ‘கிறிஸ்டியன் மைக்கேல்’ போன்ற எந்த மாமாக்களின் பங்குமில்லை’’ என சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் பிரதமர் மோடி ரபேல் விவகாரம் குறித்து முதல் முறையாக பதிலடி கொடுத்துள்ளார். 5 மாநில தேர்தலில் பாஜ கட்சி அதிர்ச்சித் தோல்வியை சந்தித்த நிலையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பளித்தது. ஆனால் பிரதமர் மோடி, ரபேல் தீர்ப்பு குறித்து எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், சோனியா காந்தியின் சொந்த தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் பிரதமர் மோடி நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிரதமரான பின் ரேபரேலிக்கு மோடி செல்வது இதுவே முதல்முறை. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாட்டில் இன்று இரண்டு முகங்கள் உள்ளன. ஒன்று, பாதுகாப்பு படையை வலுப்படுத்த அனைத்து சாத்தியமான நடவடிக்கையையும் எடுக்க வேண்டுமென்ற அரசின் முகம். மற்றொன்று, எந்த விலை கொடுத்தாவது நாட்டை பலவீனப்படுத்தி விட வேண்டுமென்ற சில சக்திகளின் முகம். நமது ராணுவம் வலுபபெறுவதை விரும்பாத அந்த சக்திகளின் வரிசையில் காங்கிரசும் இருப்பதை மக்கள் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

முந்தைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கறை படிந்தவை. காங்கிரஸ் வரலாற்றில் ‘குட்ரோச்சி மாமா’ மூலமாக சில ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. (1986ல் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது, போபர்ஸ் பீரங்கி ஊழலில் இடைத்தரகராக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டவர் குட்ரோச்சி). கடந்த சில நாட்களுக்கு முன்பாக, கிறிஸ்டியன் மைக்கேல் என்ற மாமாவை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளோம். (அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகராக இருந்ததாக இங்கிலாந்தை சேர்ந்த மைக்கேல் துபாயிலிருந்து சில நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு நாடு கடத்தி கைது செய்யப்பட்டுள்ளார்).
இந்த குற்றவாளிகளை காப்பாற்ற, தனது வக்கீல்கள் மூலமாக காங்கிரஸ் எவ்வளவு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்பதை அனைவருமே பார்க்கிறோம். எதற்காக காங்கிரஸ் மீண்டும் மீண்டும் பொய்களை கூறி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்.

ஒருவேளை, பாஜ ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்களில் குட்ரோச்சி அல்லது கிறிஸ்டியன் மைக்கேல் மாமாக்கள் இல்லையே என்பதாலா? அல்லது ஊழல் நடந்தது போன்ற சூழலை உருவாக்கி அதன் மூலம் நீதித்துறையின் நம்பிக்கையை சீர்குலைக்கும் முயற்சியா? கார்கில் போருக்குப் பிறகு, நமது ராணுவத்திற்கு நவீன ஆயுதங்களின் தேவை அவசியமானது. அந்த சமயத்தில் காங்கிரஸ் 10 ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ளது. அப்போது, விமானப்படையை வலுப்படுத்த அவர்கள் விடவில்லை. ஏன்? யார் தந்த அழுத்தத்தால் செய்யவில்லை? 2009ல் நமது ராணுவம் 1.86 லட்சம் குண்டு துளைக்காத ஜாக்கெட்கள் வேண்டுமென கோரிக்கை விடுத்தது.

2வது முறையாக காங்கிரஸ் 5 ஆண்டுக்காலம் ஆட்சி செய்தபோது ஏன் அதை கொள்முதல் செய்யவில்லை? நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 50,000 குண்டு துளைக்காத ஜாக்கெட்கள் 2016ல் வாங்கப்பட்டுள்ளன. இந்தாண்டு 1.86 லட்சம் ஜாக்கெட்டுகளை உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ரேபரேலியைத் தொடர்ந்து, பிரயாக்ராஜ் (அலகாபாத்) சென்ற பிரதமர் மோடி, அடுத்த ஆண்டு நடக்க உள்ள கும்பமேளாவுக்கான கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட  பணிகளை தொடங்கி வைத்தார்.

50 நிமிடத்தில் 30 நிமிடம் ரபேல்... ரபேல்... ரபேல்
ரேபரேலி பொதுக்கூட்டத்தில் 50 நிமிடங்கள் உரையாற்றிய பிரதமர் மோடி, 30 நிமிடங்கள் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாகவே பேசினார். மேலும், விவசாயிகள் பிரச்னை தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, ‘‘விவசாய விளைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த வேண்டுமென சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை காங்கிரஸ் தனது 10 ஆண்டு கால ஆட்சியில் ஏன் அமல்படுத்தவில்லை?’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narendra Modi ,Rae Bareilly , BJP regime, Rafael Air Force Agreement, intermediary,RaeBareli constituency, Prime Minister Modi, retaliated
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...