×

ஆந்திர தலைநகர் அமராவதியில் ரூ.406 கோடியில் 60 அடி உயரத்தில் என்.டி.ராமராவ் சிலை

திருமலை: ஆந்திர தலைநகர் அமராவதியில் ரூ.406 கோடி மதிப்பில் 60 அடி உயரத்தில் என்.டி.ராமராவ் சிலை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலம், அமராவதியில் உலகத்திற்கே உதாரணமாக திகழும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய தலைநகர் அமைக்க வேண்டும் என்பதே முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டம். இதற்காக உலகப் பிரசித்திப் பெற்ற கட்டிட வடிவமைப்பு நிறுவனமான நார்மன் பாஸ்டர் நிறுவனத்தின் மூலமாக வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்தது.
இந்நிலையில், அதற்குண்டான ஒப்பந்தம் விரைவில் அழைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கிடையே, அமராவதி தலைநகரில் நீறுகொண்டா என்ற குன்றின்மீது 60 அடி உயரமுள்ள என்.டி.ராமராவ் சிலையை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சி.ஆர்.டி.ஏ. மற்றும் எல் அண்டு டி நிறுவனம் இணைந்து வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டது.

இந்த வடிவமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் அதற்கான வடிவமைப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதில் 32 அடி உயரத்திற்கு என்.டி.ராமராவ் நினைவு கூடத்துடன் கூடிய கட்டிடம், அதற்கு மேல் 60 அடி உயரத்தில் சிலை அமைக்க திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.406 கோடி செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் ரூ.155 கோடி சிலை வடிவமைக்கவும், பத்தாயிரம் சதுர அடி பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட உள்ள கட்டிட பணிகளுக்காக ரூ.112.5 கோடி செலவாகும் என திட்டமிடப்பட்டது. என்.டி.ராமராவ் சிலைக்கு உட்புறமாக நடந்து சென்று, மேலே இருந்தபடி அமராவதி நகரின் அழகை கண்டு ரசிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
மேலும் என்டிஆர் நினைவு கட்டிடத்தை சுற்றி ஏரி,  செல்பி பாயின்ட், படகு சவாரி,  எலெக்ட்ரிக்கல் வாகனத்தின் மூலமாக செல்வது, ஸ்டார் ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட், ஆடிடோரியம் உள்ளிட்ட அனைத்து வித வசதியுடன் கூடிய நினைவு மண்டபமாக கட்டப்பட உள்ளது.

நினைவு மண்டபமாக மட்டுமல்லாமல் வணிக மற்றும் சுற்றுலா தலமாக அமைக்க வேண்டும் என்று மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் என்டிஆர் சிலை அமைக்க 14 ஏக்கரும், அதைச்சுற்றி ஏரி அமைப்பதற்காக 80 ஏக்கர் என மொத்தம் 200 ஏக்கரில் இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக செலவாகக் கூடிய தொகையை நன்கொடையாக பெறுவதற்காக என்.டி.ஆர். நினைவு மண்டப அறக்கட்டளை என தொடங்கி நிதி வசூல் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : NTR Ramaraj ,Amaravady , NT Ramarav,statue,Amaravady,60 feet,
× RELATED ஆந்திர தலைநகர் அமராவதியில் ரூ.406...