×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கோலாகல விழா கலைஞர் சிலையை சோனியா திறந்தார்: பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல், மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு, பினராய் விஜயன், நாராயணசாமி பங்கேற்பு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் சிலையை சோனியா காந்தி நேற்று திறந்து வைத்தார். ஸ்டாலின் தலைமையில் நடந்த விழாவில் ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன், நாராயணசாமி  உள்ளிட்ட  தலைவர்கள் பங்கேற்றனர்.
 திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, 80 ஆண்டு பொது வாழ்வுக்கு சொந்தக்காரர். பல குடியரசு தலைவர்களையும், பல பிரதமர்களையும் உருவாக்கியவர். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, வாஜ்பாய், வி.பி.சிங், பிரதமர் மோடி,  சோனியாகாந்தி, ராகுல்காந்தி, எல்.கே.அத்வாணி, ஜோதிபாசு, ஏ.பி.பரதன் உட்பட  தேசிய தலைவர்களுடன் நெருங்கி பழகியவர்.  13 சட்டப்பேரவை தேர்தல்களில் தொடர்ந்து  வெற்றிகளை குவித்து சரித்திர சாதனை படைத்தவர். தமிழ்நாட்டின் முதல்வராக 5 முறை பொறுப்பேற்று 19 ஆண்டுகள் ஆட்சி செய்து இந்தியாவுக்கு முன்னாடியான திட்டங்களை  உருவாக்கி தந்தவர். 14 வயதில் தமிழ்க்கொடி பிடித்து சமூக நீதி காக்க களமிறங்கி, தன்னுடைய 95 வயதிலும் தளராமல் போராடி, மரணத்திலும் தனக்கான இடஒதுக்கீட்டை பெற்று சமூக நீதியை காத்தவர்.
 மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலை அமைக்க திமுக தலைமை திட்டமிட்டது. இதற்காக மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் கருணாநிதியின் சிலையை சிற்பி தீனதயாளன் வடிவமைத்து வந்தார். 8 அடி உயரத்திலும்,  500 கிலோ எடை கொண்ட கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை தயாரானது. இதைத் தொடர்ந்து அந்த சிலை அண்ணா அறிவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. கருணாநிதியின் சிலையுடன், அறிஞர்  அண்ணாவின் சிலையும் புதுப்பிக்கப்பட்டது.

கருணாநிதியின் சிலை திறப்பு விழா நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. . வண்ண விளக்குகளால் அண்ணா அறிவாலயம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் துரைமுருகன் வரவேற்றார். அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்  சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மாலை 5.15 மணிக்கு வந்தார். சரியாக மாலை 5.18 மணியளவில் கருணாநிதியின் திருவுருவச்சிலையை நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராய்  விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் விழாவில் ராஜாத்தி அம்மாள், மல்லிகா மாறன், செல்வி, செல்வம், அமிர்தம், துர்கா ஸ்டாலின், தயாநிதி மாறன், கனிமொழி,  அரவிந்தன், மு.க.தமிழரசு, மோகனா தமிழரசு, உதயநிதி, அருள் நிதி, அறிவு நிதி உள்ளிட்ட குடும்பத்தினர். திருநாவுக்கரசர், கி.வீரமணி, வைகோ, ஜி.கே.வாசன், டி.ராஜா, முத்தரசன், திருமாவளவன், என்.ஆர்.தனபாலன்.

நடிகர்கள் ரஜினிகாந்த், சத்ருகன் சின்ஹா, பிரபு,  வடிவேலு,  விவேக்,   நாசர், மயில்சாமி, கவிஞர் வைரமுத்து, நடிகை குஷ்பு மற்றும் பல்வேறு துறையை சார்ந்தவர்கள், பல்வேறு  அரசியல் கட்சிகளின் தேசிய, மாநில  தலைவர்கள், முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், தொழில் அதிபர்கள்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிலை திறப்பு விழாவுக்கு வந்தவர்களை மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.சிலை திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் நேரடியாக  மெரினா கடற்கரைக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு 5.35 மணியளவில் 2 பேரும் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு  வந்தனர். பின்னர் சோனியா, ராகுல் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின், பொதுக்கூட்டம் நடைபெறும் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.  மைதானத்துக்கு புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து மாலை 5.57 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்தில் கட்சியினர், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால்,  ஒய்.எம்.சி.ஏ. மைதானம் மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடியது. பொதுக் கூட்டம் முடிந்ததும் அவர்கள் சென்னை விமானநிலையம் சென்றனர். அதன்பின்னர் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

* கலைஞர் கருணாநிதியின் சிலை உயரம் 8 அடி.
* வெண்கல சிலை 500 கிலோ எடை ெகாண்டது.
* சிலையை வடிவமைத்தவர் சிற்பி தீனதயாளன்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sonia ,Golagala Festival Art Gallery ,Rahul ,MK Stalin ,Chennai Annamalavayana ,Chandrababu Naidu ,rally ,Narayanasamy ,Pinarayi Vijayan , Sonia, Golagala,Chennai Annamalavayana, Rahul, MK Stalin, Chandrababu Naidu, Pinarayi Vijayan, Narayanasamy
× RELATED டெல்லியில் காங்கிரஸ் தலைவர்...