×

இலங்கையில் நிலவிய அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி...... மீண்டும் பிரதமரானார் ரணில்

கொழும்பு: இலங்கை பிரதமராக 5வது முறையாக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.  கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் ரணிலுக்கு, அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடு தீவிரம் அடைந்ததால், ரணிலை பிரதமர் பதவியில் இருந்து சிறிசேனா கடந்த அக்டோபர் 26ம் தேதி நீக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் அவரால் பெரும்பான்மையை நிருபிக்க முடியவில்லை.

இதையடுத்து, இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்துவிட்டு, ஜனவரி 5ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரணில் மனு செய்தார். அதிபர் சிறிசேனாவின் உத்தரவுக்கு  உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ராஜபக்சே பிரதமராக செயல்படவும், இலங்கை நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் ஐக்கிய தேசிய கட்சி எம்பி சாஜித் பிரேமதாசா, ரணில் விக்ரமசிங்கே மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 225 எம்.பி.க்களில் 117 பேர் ரணிலுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இதனால், நம்பிக்கை தீர்மானத்தில் ரணில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்கும்படி அதிபர் சிறிசேனாவை சாஜித் பிரமேதாசா வலியுறுத்தினார். ஆனால், அவர் மறுத்து விட்டார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த 13ம் தேதி தீர்ப்பளித்தது. அதில், ‘நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது’ என நீதிபதிகள் கூறினர்.

கடைசி கட்ட முயற்சியாக, தனக்கு எதிராக பிறப்பித்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ராஜபக்சே மனு செய்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம். ராஜபக்சேவின் அப்பீல் மனுவை அடுத்த மாதம் 16ம் தேதி முதல் விசாரிப்பதாக கூறியது. பெரும்பாலான நாடுகள் ராஜபக்சே அரசை அங்கீகரிக்கவில்லை. அரசியல் குழப்பம் காரணமாக மூடிஸ், பிட்ச் போன்ற சர்வதேச தர நிர்ணய ஏஜன்சிகளிலும், இலங்கையின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.

இலங்கையில் ஒரு மாதத்துக்கு மேலாக நீடிக்கும் அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்டும் வகையில், பிரதமர் பதவியை ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார். நாட்டின் நலன் கருதி இந்த முடிவை எடுத்ததாக இலங்கை எம்.பி லட்சுமண் யப்பா அபய்வர்தனா தெரிவித்தார். இதையடுத்து  ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார். ஜனவரி 1-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sri Lanka ,Ranil , Ranil Wickramasinghe, Sri Lanka, President Sirisena, Rajapaksa
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...