×

ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் உயர்வு: ஷூட்டிங் கட்டணம் 50 ஆயிரம்

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நுழைவு கட்டணம் நேற்று முதல் உயர்த்தப்பட்டது. பெரியவர்களுக்கு ₹40ம், சிறுவர்களுக்கு ₹20ம் இனி வசூலிக்கப்படும். ஷூட்டிங் கட்டணமும் ₹50 ஆயிரமாக உயர்ந்தது. ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, தமிழகம் மாளிகை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகியவை தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பூங்காக்களில்  மரவியல் பூங்கா மற்றும் தமிழகம் மாளிகை பூங்கா தவிர மற்ற அனைத்து பூங்காக்களிலும் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் வருகிறது.  குறிப்பாக, தாவரவியல் பூங்கா மூலம் ஆண்டுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. கடந்த பல ஆண்டாக தாவரவியல் பூங்காவில் பெரியவர்களுக்கு ₹30ம்,  சிறியவர்களுக்கு ₹15ம் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டது. சீசன் அல்லாத சமயங்களிலும் இந்த கட்டணமே வசூலிக்கப்பட்டது.

  இந்நிலையில், தாவரவியல் பூங்கா கட்டணம் நேற்று உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் பெரியவர்களுக்கு ₹40ம், சிறுவர்களுக்கு ₹20ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், ஷூட்டிங் கட்டணமும்  உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை தாவரவியல் பூங்காவில் ஷூட்டிங் எடுக்க நாள் ஒன்றுக்கு ₹25 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டடது. இனி நாள் ஒன்றுக்கு ₹50 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். திடீரென கட்டணம்  உயர்த்தப்பட்டுள்ளதால், சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.  இதுகுறித்து தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் கூறியதாவது:  தாவரவியல் பூங்காவுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பூங்கா பராமரிப்பு பணிகள் ஆகியவை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, பெரியவர்களுக்கு ₹10ம், சிறுவர்களுக்கு ₹5 மட்டுமே தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் பூங்காக்கள் மற்றும் தீம் பார்க்குகளை காட்டிலும் இது மிகவும் குறைவு. இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Entry, Ooty Botanical, Shootout,thousand
× RELATED தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில்...