×

சீனியர்-ஜூனியர் பிரச்னை எதிரொலி காவலரை கத்தியால் குத்திய ஏட்டு கைது: இருவரும் சஸ்பெண்ட்

சென்னை: சீனியர்-ஜூனியர் பிரச்னையில் காவலரை கத்தியால் குத்திய ஏட்டு கைது செய்யப்பட்டார்.  மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் மறைமலையான். இவர் நேற்று ரோந்து வாகனத்தை எடுப்பதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடலோர காவல்படை சோதனைச்  சாவடிக்கு சென்றார். அங்கிருந்த ரோந்து வாகனத்தை எடுக்க முயன்றார். அப்போது சாவடி பணியிலிருந்த மாமல்லபுரம் காவல் நிலைய முதல் நிலைகாவலர் பூபாலன் (35), ரோந்து வாகனத்தை எடுக்க எதிர்ப்பு தெரிவித்தார்.  மேலும் ‘நான் பணியில் இருக்கும்போது சாவடியில் இருந்து நீ எப்படி வண்டி எடுக்கலாம்’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு மறைமலையான், ‘நான் உன்னைவிட சீனியர் உன்னிடம் எதுவும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை’  என்றார். இதனால் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மறைமலையான் திடீரென பூபாலனை தாக்கினார். மேலும் அருகில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் பூபாலனின்  முகத்தில் சரமாரியாக குத்தினார். இதில் மூக்கு, வாய், காது பகுதிகளில் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டனர். காயமடைந்த பூபாலன், நெல்லிக்குப்பம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் மாமல்லபுரம்  போலீசார் வழக்கு பதிவு செய்து மறைமலையானை கைது செய்தனர். இந்நிலையில் மாவட்ட எஸ்பி சந்தோஷ் ஹதிமானி, பணியில் இருக்கும்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக மறைமலையான், பூபாலன் ஆகிய  இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sr.-Jr. , Echo ,Senior-Junior Problem, A knife , Stabbing arrested,suspended
× RELATED ஆந்திராவில் மதுக்கடைகள் மூடல்...