×

போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி: தமிழக அரசின் அரசாணை ரத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு

புதுடெல்லி:  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என  தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நேற்று அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணையையும் ரத்து  செய்தது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து தமிழக அரசு தரப்பில் அரசாணை  பிறப்பிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் தலைமையில் ஆலைக்கு சீல் வைத்து இழுத்து மூடப்பட்டது.  இந்த நிலையில் தமிழக அரசின் மேற்கண்ட முடிவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது. ஆலை பகுதியை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட மேகாலயா உயர்  நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அதுகுறித்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் வேதாந்தா நிறுவனம் தரப்பில் கடந்த 7ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் ஏகே.கோயல் அமர்வில் கடந்த 10ம் தேதி  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான சி.எஸ்.வைத்தியநாதன் தனது வாதத்தில், “ நிலத்தடி நீர், காற்று மாசு, குடிநீர், மக்கள் நலன் பாதிப்பு ஆகிய  எதையும் அந்த குழு கவனத்தில்  கொள்ளாமல் தவறான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் அறிவியல் பூர்வமான எதுவும் கிடையாது என உறுதியாக கூற முடியும். அதனால் ஆலையை மீண்டும் திறக்க தீர்ப்பாயம் கண்டிப்பாக அனுமதி வழங்கக் கூடாது  என வாதிட்டார்.

 வேதாந்தா நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிட்டார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் அமர்வு அடுத்த ஒரு வாரத்திற்குள்  தீர்ப்பு வெளியிடப்படும் என கடந்த 10ம் தேதி உத்தரவிட்டது.இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: இந்த விவகாரத்தில் ஆலையை மூட தமிழக அரசு கொடுத்த விளக்கங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. அதனால் தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை அடுத்த மூன்றுவாரங்களுக்குள் மீண்டும் திறக்கலாம். இருப்பினும் இதில் சில நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. ஆலை தொடர்பாக பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க என்று தனி இணையதளம் தொடங்க வேண்டும். இதில் மாவட்ட நிர்வாகம்,  மாநில மாசுகட்டுப்பாட்டு ஆணையம், தேசிய மாசுகட்டுப்பாட்டு ஆணையம் ஆகியவற்றோடு இணைந்து செயலாற்ற வேண்டும். மாநில அரசு ஆலையை சுற்றியிருக்க கூடிய நீரின் மாசு அளவு குறித்த விவரங்களை தொடர்ந்து  கண்காணித்து தொடர்ந்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆலை நிர்வாகமும் தினமும் கழிவுகளை முறைப்படி அகற்ற வேண்டும். ஆலை நிர்வாகம் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடவில்லை என்றால் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த தொகை ஆலையை  சுற்றியிருக்க கூடிய பகுதிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்காக செலவிடப்படும்.ஆலை நிர்வாகம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.100 கோடியை ஆலை அமைந்துள்ள பகுதியின் குடிநீர், கல்வி, உள்ளிட்ட மக்கள் நல திட்டங்களுக்காக கண்டிப்பாக வழங்க வேண்டும். மேலும் ஆலை கழிவுகளை அப்பகுதியில்  உள்ள பட்டா நிலத்திலோ அல்லது ஆறுகளிலோ கொட்டக் கூடாது. ஆறுகளின் குறுக்கே ஆலை வசதிக்காக எந்த ஒரு புதிய கட்டுமானத்தையும் மேற்கொள்ளக்கூடாது.ஆலையில் இருந்து வரும் மாசு அளவுகளை கண்காணித்து அதனை கட்டுக்குள் வைக்க முறையான தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இதுகுறித்து ஒருவேலை உதவி தேவைப்படும் பட்சத்தில் மத்திய மாசு கட்டுப்பாட்டு  ஆணையத்தை அணுகலாம்ஆலையில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை பெற அதன் நிர்வாகம் தமிழக அரசிடம் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஆலையை மூடுவது  தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆலைக்கு எதிராக போடப்பட்ட அனைத்து வழக்குகளையும்  முடித்து வைத்து நேற்று இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு வெளியான  அடுத்த சில நிமிடங்களில் தூத்துக்குடியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் மக்கள் ஆங்காங்கு கூடி பேசத்துவங்கினர்.  மீண்டும் போராட்டம் வெடிக்கும் என போராட்டங்களை நடத்தி வந்த பல  அமைப்புகளின் தலைவர்கள் கூறினர். ஸ்டெர்லைட் ஆலை உட்பட பல பகுதிகளிலும் போலீஸ் குவிக்கப்பட்டது. நகரம் முழுக்க பதற்ற நிலை காணப்பட்டது.

முன்னெச்சரிக்கை கைது
தூத்துக்குடியில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே  தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட  போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த சில  நாட்களாக  போராட்டத்தை தூண்டுபவர்கள் என சந்தேகப்படும் நபர்களை போலீசார்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து வருகின்றனர்.  தற்போது தீர்ப்பு  ஆலைக்கு ஆதரவாக வந்துள்ளதால் போராட்டம் அதிகரிக்கலாம் என  கருதி எஸ்பி  முரளிரம்பா மாவட்டம் முழுவதும் பாதுகாப்பை அதிகரித்துள்ளார். கலெக்டர்  அலுவலகம், ஸ்டெர்லைட் ஆலை வளாகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டு உள்ளது.

எடப்பாடி பேட்டி
சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அளித்த பேட்டியில்,  ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அதன் உரிமையாளர், தேசிய  பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்ததில், அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு   வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யும் என்றார்.  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன்  கூறும்போது, `தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்  என மத்திய பசுமை  தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில், மத்திய பசுமை தீர்ப்பாய  உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மனு  தாக்கல் செய்யப்படும். இந்த விவகாரத்தை  சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்’  என்றார்.

தமிழக அரசு மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் சாதிக்குமா?
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும் என மாநில அரசு தரப்பில் நேற்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பாயம் அமைத்த ஓய்வு நீதிபதி தலைமையிலான குழுவிற்கு தடை விதிக்கவே முன்னதாக உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அப்படி இருக்கையில் தமிழக அரசின் மேல்முறையீடு  மனுவிற்கு எந்த அளவிற்கு நீதிமன்றம் முக்கியத்துவம் தரும் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மேகதாது, பட்டாசு வழக்கு,  நீட் தேர்வு ஆகிய மேல்முறையீடு மனு தொடர்பாக  தமிழக அரசின் அனைத்து கோரிக்கைகளையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக  அரசு தாக்கல் செய்யவுள்ள மேல்முறையீட்டு மனுவிற்கு உச்ச நீதிமன்றத்தில் எந்தவித உத்தரவு கிடைக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : factory ,Sterlite ,Kilinochchi ,government ,Tamil Nadu , 13 fighters,shot dead, Sterlite plant,state government, National Green Tribunal
× RELATED 97 பேர் பங்கேற்பு பெரம்பலூர் அருகே...