×

வங்கக்கடலில் உருவானது 'பெய்ட்டி'புயல்...... சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு பெய்ட்டி என பெயரிடப்பட்டுள்ளது. பெய்ட்டி புயல் ஆந்திராவின் மசூலிப்பட்டினம்-காக்கிநாடா இடையே டிச.17ம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணிநேரத்தில் தீவிர புயலாக மாறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோர பகுதிகளில் டிச.16,17ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும். புயலால் கோதாவரி, விசாகப்பட்டினம், கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஏனம் மாவட்டமும் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் மிதமான மற்றும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடலோரப் பகுதிகளான திருவொற்றியூர், எண்ணூர், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் வீசி வருகிறது. கடல் அலைகள் 15 அடி உயரம் வரை எழுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. புயல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 1077 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. புயல், கனமழையால் பாதிப்புகள் ஏற்பட்டால் பழவேற்காடு மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் பொதுமக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bangladesh ,Chennai , cyclone, bay of bengal, Indian Meteorological Center,
× RELATED சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர் 11 பேர் திரிபுராவில் கைது