×

ஹாரிஸ், பிஞ்ச், ஹெட் அரை சதம்: பெர்த்தில் ஆஸ்திரேலியா ரன் குவிப்பு: 6 விக்கெட்டுக்கு 277 ரன்

பெர்த்: இந்திய அணியுடனான 2வது டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன் குவித்துள்ளது. பெர்த் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. இந்திய அணியில் ரோகித், அஷ்வினுக்கு பதிலாக உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி இடம் பெற்றனர். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. தொடக்க வீரர்களாக மார்கஸ் ஹாரிஸ், ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். பொறுப்புடன் நிதானமாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. பிஞ்ச் 50 ரன் (105 பந்து, 6 பவுண்டரி) விளாசி பூம்ரா வேகத்தில் எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார். அடுத்து வந்த உஸ்மான் கவாஜா 38 பந்துகளை சந்தித்து 5 ரன் எடுத்த நிலையில், உமேஷ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பன்ட் வசம் பிடிபட்டார்.

சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஹாரிஸ் 70 ரன் (141 பந்து, 10 பவுண்டரி) விளாசி விஹாரி பந்துவீச்சில் ரகானே வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹேண்ட்ஸ்கோம்ப் 7 ரன் எடுத்து இஷாந்த் வேகத்தில் கேப்டன் விராத் கோஹ்லியின் அற்புதமான கேட்ச்சில் பெவிலியன் திரும்பினார். தலைக்கு மேலாக உயரே பறந்து வந்த பந்தை எம்பிக் குதித்து ஒற்றைக் கையால் கோஹ்லி பிடித்த விதம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 112 ரன் எடுத்திருந்த ஆஸ்திரேலியா, மேற்கொண்டு 36 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து திடீர் சரிவை சந்தித்தது.

இந்த நிலையில், ஷான் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் ஜோடி உறுதியுடன் விளையாடி அணியை நெருக்கடியில் இருந்து மீட்டது. இருவரும் 5வது விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்தனர். ஷான் மார்ஷ் 45 ரன் (98 பந்து, 6 பவுண்டரி), ஹெட் 58 ரன் (80 பந்து, 6 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தனர். முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 90 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன் குவித்துள்ளது. கேப்டன் டிம் பெய்ன் 16 ரன், கம்மின்ஸ் 11 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்திய பந்துவீச்சில் இஷாந்த், விஹாரி தலா 2, உமேஷ், பூம்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Harris ,Australia ,Perth , இந்திய அணி,ஆஸ்திரேலியா,டெஸ்ட் போட்டி
× RELATED தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த...