×

நிமான்ஸ் மருத்துவமனை-கோரமங்களா செல்லும் சாலையில் நடந்துவரும் மெட்ரோ பணியால் போக்குவரத்து பாதிப்பு: இரவு நேரங்களில் அதிக விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனை சாலையில் இருந்து ஜெயநகர் மற்றும் கோரமங்களா செல்லும் சாலைகளில் மந்தமான முறையில் நடந்து வரும் மெட்ரோ பணிகளால் வாகன போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் முறையான இரும்பு தடுப்பு வேலிகள் இல்லாமல் பணிகள் நடைபெறுவதால் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  தொழில்நுட்ப நகரம் பெங்களூருவை மேலும் அழகுப்படுத்தும் நோக்கில், பல்வேறு நவீனத்துவங்கள் புகுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நகரில் வெவ்வேறு இடங்களில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக மெட்ரோ பணிகள், ஸ்மார்ட் சிட்டி பணிகள், மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இவற்றால் பெங்களூரு எதிர்காலத்தில் நன்மை என்றாலும் தற்போது ஒரு சில பிரச்னைகள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. மேம்பாலம் அமைப்பதற்காக தோண்டப்படும் குழிகள் மற்றும் அதை சுற்றியுள்ள சாலைகளை புனரமைக்காமல் அப்படியே கிடப்பில் போடுவதால், வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் குண்டு, குழிகள் ஏற்பாடுவதால், பைக்கில் செல்பவர்கள் விபத்தை சந்திக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இதற்கு உதாரணம் பெங்களூரு மடிவாளாவில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரை செல்லும் சாலைகள். இங்கு ஒரு சில இடங்களில் மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. மேலும் சில இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடந்தது. இதற்காக சாலைகள் பெயர்க்கப்பட்டது. பல நாட்கள் ஆகியும் அந்த சாலை புனரமைக்கப்படவில்லை. மாறாக குண்டு குழியுமாக கிடக்கும் அந்த சாலையில் பயணிக்கும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்தை ஏற்படுத்தி வருகிறது. மழை நேரங்களில் குழிகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் ஒவ்வொரு, வாகனங்கள் தடம் தெரியாமல் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்துவிட்டனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் சாலைகளை ஒட்டுபோடுகிறதே தவிர. அவற்றிற்கு நிரந்தர தீர்வு காணுவது இல்லை. இதனால் ஒரு பகுதி மேடாகவும், மறு பகுதி பள்ளமாகவும் காட்சியளிக்கிறது.இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் பாதுகாப்பு இல்லாமல் நடைபெறும் மெட்ரோ பணிகளால், விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இதற்கு உதாரணம் பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனையில் இருந்து கோரமங்களா மற்றும் ஜெயநகர் செல்லும் சாலைகளை கூறலாம். இந்த சாலையில் நடைபெறும் மெட்ரோ பணிகளால், ஏராளமான இரும்பு உபகரணங்கள் அப்படியே சாலையோரங்களில் குவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தூண்கள் அமைப்பதற்காக பயன்படுத்தப்படும் இரும்பு தகடுகளால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. பகல் நேரங்களில்  சரியாக கண்காணித்து, வாகனத்தை ஓட்ட முடியும். ஆனால் இரவு நேரங்களில், மின்விளக்கின் வெளிச்சம் எதுவும் இருப்பது இல்லை. அத்தகைய நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நிலை தடுமாறி, இரும்பு கம்பிகளில் மோதி, விபத்து ஏற்படுகிறது.பெரும்பாலான இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களில் இரும்பு தடுகளை கொண்டு, சுற்றி அடைத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த சாலையில் எந்தவிதமான தடுப்பு தகடும் இல்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சாலையின் எல்லைகள் தெரிவது இல்லை. மேலும் இடிபாடுகளை ஏற்படுத்தும் வகையில் மெட்ரோ பொருட்களை சாலையோரங்களில் குவித்து வைத்திருப்பதால், வாகனங்கள் செல்ல முடியாமல் நெரிசல்களில் சிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மெட்ரோ பணிகளின் போது முறையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தவேண்டுமென்று பி.எம்.ஆர்.சி.எல் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இந்த இடங்களில் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லை. மேலும் சில இடங்களில் மெட்ரோ மேம்பாலங்கள் அமைக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளிகள், எந்தவிதமான பாதுகாப்பு கவசங்களும் இல்லாமல் பணியாற்றுவது, அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை காட்டுகிறது. இந்த பாதுகாப்பு இல்லாத பணிகளால் சாலைகளில் செல்லும் வாகனங்களும் தினமும் பீதியுடன் பயணிக்கவேண்டியுள்ளது. அதாவது  மெட்ரோ மேம்பாலங்கள் அமைப்பதற்காக ஆளுயரத்தில் நிறுவப்பட்டிருக்கும் இரும்பு பெல்டுகளில் இருந்து சில, பொருட்கள் கீழே விழும்போது சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அடிப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் இரும்பு தடுப்பு சுவர்கள் அமைத்து பணிகளை மேற்கொண்டால், இத்தகைய விபத்துகளை தடுக்க முடியும் என்று பலர் பி.எம்.ஆர்.சி.எல் நிர்வாகத்தில் மீடியாக்கள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பி.எம்.ஆர்.சி.எல் இதை கண்டு கொள்வதாக தெரியவில்லை. மாறாக துரிதமாக பணிகள் முடிந்துவிடும். அதனால் தடுப்பு வேலிகளை அமைக்கவேண்டிய கட்டாயம் ஏற்படாது என்று அலட்சியமாக பதில் கூறிவிடுகின்றனர். ஏற்கனவே மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களில் ஏராளமான விபத்துகள் நடந்து பல ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். இனி அதுபோன்ற சம்பவங்கள் ஊழியர்களுக்கு மட்டுமின்றி பொது மக்களுக்கும் நடைபெற கூடாது என்று ஜெயநகர் மற்றும் கோரமங்களாவில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்….

The post நிமான்ஸ் மருத்துவமனை-கோரமங்களா செல்லும் சாலையில் நடந்துவரும் மெட்ரோ பணியால் போக்குவரத்து பாதிப்பு: இரவு நேரங்களில் அதிக விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Metro ,Nimans Hospital ,Koramangala Road ,Bengaluru ,Nimans Hospital Road ,Jayanagar ,Koramangala ,Dinakaran ,
× RELATED வார இறுதி நாட்களில் ₹100 கட்டணத்தில்...