×

காற்றழுத்தம் புயலாக மாறும்...கனமழை இருக்கும் : வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு  மற்றும் வடமேற்கு திசையில் நகர்வதால், நாளை அது புயலாக மாறும். இதன்  காரணமாக, நாளை முதல் தமிழக கடலோரப் பகுதியில் மழை பெய்யத் தொடங்கும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம்  தொடங்கிய வட கிழக்கு பருமழை காலம் 75 சதவீதம் முடிந்த நிலையில், தற்போது  வங்கக் கடலில் இரண்டாவது புயல் உருவாகியுள்ளது. கடந்த ஒரு வாரமாக தென்  கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டு  இருந்த காற்றழுத்தம் படிப்படியாக  வலுவடைந்து நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்)  மாறியது. இந்த புயல் சின்னம் மணிக்கு 13 கிமீ வேகத்தில் வடக்கு மற்றும்  வட மேற்கு திசையில் நகரத் தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி சென்னைக்கு  900 கிமீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தெற்கு மற்றும் தென்கிழக்கு  கடல் பகுதியில் 1000 கிமீ தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது. தற்போது அந்த  புயல் சின்னம் சென்னை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி  நகர்ந்து வருகிறது. சென்னை அருகே வரும்போது அது புயலாக மாறும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை மறுநாள் (17ம் தேதி) புயல் வடக்கு  மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிக்கு  நெருங்கி வந்து அன்று மாலை ஓங்கோல்- காக்கிநாடா இடையே கரையைக் கடக்கும்.  பின்னர் அது படிப்படியாக வலுவிழக்கும். புயல் சின்னம் கடலில் நிலை  கொண்டு இருப்பதாலும், அது வட மேற்கு திசையில் நகர்வதாலும், கடல் பரப்பில்  மணிக்கு 65 கிமீ முதல் 80 கிமீ வேகம் வரையில் காற்று வீசுகிறது. அதனால்,  மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். புயல்  கடலோரப் பகுதிக்கு நெருங்க நெருங்க காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 100 கிமீ வேகம் வரை காற்று  வீசலாம். 16ம் தேதி காற்றின் வேகம் மணிக்கு 120 கிமீ வேகம் வரை  அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலில் அதிக சீற்றம்  காணப்படும். ஒரு மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பும். இந்த வானிலை  நிகழ்வின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் மழை பெய்யத்  தொடங்கும். ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும். இந்த  புயல் தெற்கு ஆந்திராவில் கரையைக் கடக்கும் என்பதால் சென்னைக்கு அபாயம்  ஏதும் இல்லை. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதை அடுத்து  சென்னை,  எண்ணூர், புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம்  துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Windstorm ,storm , Bengal Sea, Windmill, Storm, Heavy Rain
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; 148.54 கோடி...