×

குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை ஆஜராக சிபிஐ சம்மன்

சென்னை: குட்கா வழக்கில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நாளை ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, போதை பொருட்கள் சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதில், குட்கா வியாபாரி மாதவராவ், அவரது பங்குதாரர்கள், அரசு அதிகாரிகள் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்கு சென்னை சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தொடர்புள்ளதாக கூறப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அவர்கள் குறித்த எந்த தகவலும் இடம் பெற வில்லை. இது முழுக்க, முழுக்க இவர்களை இந்த வழக்கில் இருந்து தப்பவைக்கும் முயற்சி என குற்றச்சாட்டு எழுந்தது.

குட்கா வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர்களுடன் கூடிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். இல்லையேல், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டி வரும் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கும், சிபிஐ பொறுப்பு இயக்குனருக்கும் புகார் மனு அளித்தார். திமுக அளித்த புகாரின்படி குட்கா ஊழல் வழக்கை சிபிஐ மீண்டும் கையில் எடுத்து இரண்டாம் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் தனது அதிரடி நடவடிக்கையாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது.

அதன்படி, அமைச்சர் விஜயபாஸ்கரின் நேர்முக உதவியாளர் சரவணன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜரானார். சிபிஐ அதிகாரிகள் தங்கள் விசாரணையை சரவணனிடம் நடத்தினர். இந்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலை வாக்குமூலமாக சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். இந்நிலையில் குட்கா வழக்கில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நாளை ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவும் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijayapaskar ,summit ,Gudka ,CBI , Gudka, CBI, Samman, Vijayapaskar
× RELATED தேசிய அளவிலான ஆக்சுவேரியல்...