×

மேகதாது அணை விவகாரம் : கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம்!

புதுச்சேரி : 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள சூழலில் புதுச்சேரி சட்டப்பேரவை இன்று கூடியது. புதுச்சேரி சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை முன்னாள் செயலாளர் கோஃபி அன்னான் மறைவுக்கும் அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் கடந்த வாரம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என அங்குள்ள எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. எனவே பேரவையின் சிறப்புக்கூட்டம் இன்று நடைபெறும் என பேரவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்திருந்தார். அதன்படி புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதில் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மேகதாதுவில் அணை கட்ட பூர்வாங்க திட்ட அறிக்கை தயார் செய்ய தடையில்லா சான்றிதழ் வழங்கிய மத்திய நீர்வள ஆணையத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய தடையில்லா சான்றிதழை உடனடியாக திரும்பப்பெற உத்தரவிடக் கோரியும், கர்நாடக அரசு தொடர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தடை விதிக்கவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் பின்னர் பேட்டியளித்த முதலமைச்சர் நாராயணசாமி, மேகதாது அணை விவகாரத்தில் புதுச்சேரி அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார். மேலும் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராகவும், காவிரி ஆணையம் மற்றும் காவிரி நீர் வாரியத்திற்கு தனித்தனி தலைவரை நியமிக்க கோரியும் வழக்கு தொடரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக சட்டப்பேரவை கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி பாஜக நியமன எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Meghadadu ,Puducherry Assembly ,Government ,Karnataka , Meghatadu Dam, Karnataka State, Puducherry Legislative Assembly, CM Narayanasamy
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை