×

சேலம் அரசு மருத்துவமனையில் 40 சதவீதம் பிரசவம் அதிகரிப்பு : மக்களிடம் குறைந்தது தனியார் மோகம்

சேலம்: தமிழகத்தில் சிறிய நோய்களுக்கு கூட தனியார் மருத்துவமனைகளை, பொதுமக்கள் நாடிச்செல்லும் வழக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை சமீபகாலமாக அரசு மருத்துவமனைகளை நாடி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலம் அரசு மருத்துவமனைக்கு சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். இதில் உள் நோயாளிகளாக 2 ஆயிரம் பேரும், வெளிநோயாளியாக 3 ஆயிரம் பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் கிடைக்கும் உயர்தர சிகிச்சை, சேலம் அரசு தலைமை மருத்துவமனையிலும் கிடைத்து வருகிறது. அந்த வகையில்,கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரசவ வார்டு தொடங்கப்பட்டது. இந்த வார்டு திறப்பு விழாவுக்கு பின்பு, பிரசவத்திற்கு வரும் தாய்மார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதத்தில் 30 முதல் 40 சதவீதம் பிரசவம் நடப்பது அதிகரித்துள்ளது. இதுகுறித்து சேலம் அரசு மருத்துமவனை டீன் ராஜேந்திரன் கூறியதாவது: சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் 24 மணிநேரமும் இரண்டு தலைமை டாக்டர்கள், இதைதவிர 5 டாக்டர்கள்,20க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

பிரசவம் பார்க்க 4 தியேட்டர் உள்ளது. பிரசவத்திற்கு என்று 16 டாக்டர்கள் பணியில் இருக்கின்றனர். பிரசவத்திற்கு வரும் தாய்மாருக்கு ரத்த கொதிப்பு இருந்ததால், அரை மணிநேரத்தில் ரத்தகொதிப்பை குறைத்து,பிரசவம் பார்க்கும் வசதி உள்ளது. தாய்மார்களுக்கு முடிந்தவரை சுகப்பிரசவம் நடக்க முயற்சி செய்கிறோம். முடியாதபட்சத்தில்தான் ஆபரேஷன் செய்கிறோம். பிரசவித்த தாய்மார்களுக்கு எவ்வித சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்க,அவ்வப்போது வார்டை சுத்தம் செய்கிறோம். 24 மணிநேரம் தொடர் கண்காணிப்பு, அனைத்து அடிப்படை வசதி இருப்பதால்,அரசு மருத்துவமனைக்கு வரும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சேலம் அரசு மருத்துவமனையில் நடப்பாண்டில் ஜனவரியில் 597, பிப்ரவரியில் 618, மார்ச்சில் 764, ஏப்ரலில் 698, மே மாதத்தில் 806, ஜூனில் 796, ஜூலையில் 811, ஆகஸ்டில் 864, செப்டம்பரில் 837, அக்டோபரில் 935, நவம்பரில் 1028 என்று பிரசவம் நடந்துள்ளது.

நவம்பரில் நடந்த 1028 பிரசவத்தில் 567 சுகபிரசவமாகவும், 461 ஆபரேஷனும் செய்யப்பட்டது. இந்த வகையில் கடந்த ஆறு மாதத்தில் 30 முதல் 40 சதவீதம் பிரசவம் அதிகரித்துள்ளது. இதே நிலையில் சென்றால் எதிர்வரும் மாதங்களில் 70 முதல் 80 சதவீதம் பிரசவம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு டீன் ராஜேந்திரன் கூறினார். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,‘‘பிரசவம் பார்க்க தனியார் மருத்துவமனைக்கு சென்றால், சுகபிரசவம் என்றால் 30 ஆயிரம் செலவாகிறது. அதே நேரத்தில் ஆபரேஷன் என்றால் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவாகிறது. இதன் காரணமாக ஏழை, நடுத்தரவாசிகள் பெரும்பாலும் அரசு மருத்துவமனை,ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்த்து வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் என்ன சிகிச்சை கிடைக்கிறதோ, அதே சிகிச்சை தற்போது அரசு மருத்துவமனையிலும் கிடைக்கிறது,’’ என்றனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Childbirth ,Salem Government Hospital , Salem, Government Hospital, Childbirth
× RELATED காளை முட்டிய வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு