×

வேதாரண்யம் தாலுகாவில் கஜா புயலால் மீளாத குடிசை வாழ் மக்கள்

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகாவில் கஜா புயலால் மீளாத குடிசை வாழ் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். அரசு நிவாரண தொகை போதாது என அவர்கள் குற்றச்சாட்டை கூறியுள்ளனர். வேதாரண்யம் தாலுகாவில் கடந்த மாதம் 15ம் தேதி வீசிய கஜா புயலினால் ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான மா, தென்னை, புளி, முந்திரி உள்ளிட்ட அனைத்து வகையான மரங்களும் சாய்ந்தன. நிவாரண பணிகளை மேற்கொண்ட அரசு நிர்வாகம் முதல் கட்டமாக பிரதான சாலைகளை சரிசெய்து மறுநாளே போக்குவரத்தை சரி செய்தனர். பின்பு படிப்படியாக நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 45 ஆண்டு காலம் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட 45 ஆயிரம் மின் கம்பங்கள், 245 டிரான்ஸ்பார்மர்கள் முற்றிலும் சேதமடைந்தன.

இதனை சரி செய்யும் பணியில் வெளி மாவட்டங்களிலிருந்து ஆறாயிரம் மின்வாரிய ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது வரை நகர புறத்தில் 80 சதவீதமும், கிராமப்புறத்தில் 40 சதவீதமும், மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின் இணைப்பு சரி செய்யப்பட்ட பகுதிகளில் இரவு எட்டு மணி முதல் காலை ஏழு மணி வரை மட்டுமே மின்வினியோகம் வழங்கப்படுகிறது. பின்பு கிராமப்புறங்களில் உள்ள மின் கம்பங்களை சரிசெய்வதற்காக மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூபாய் பத்தாயிரமும், பகுதி சேதத்திற்கு ரூபாய் ஐந்தாயிரமும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தற்போது வேதாரண்யம் பகுதியில் தொலைதொடர்பு சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் வேதாரண்யம் தாலுகாவில் 25க்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்கள் இயங்கவில்லை. இதனால் நிவாரண தொகை எடுக்க முடியாமல் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று நிவாரண தொகை எடுப்பதற்காக அனைத்து வங்கிகள் முன்பு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வங்கி வந்தனர். ஒரே நேரத்தில் பணம் எடுக்க பொதுமக்கள் வந்ததால் பணம் எடுப்பதிலும் மிகுந்த காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் அரசும் தொண்டு நிறுவனங்களும் அதிமுக கட்சியினரும் முற்றிலும் குடிசைகளை இழந்தவர்களுக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து கீற்றுக்களை வாங்கி வழங்கி வருகின்றனர். பல்வேறு வகையில் உதவிகள் கிடைத்த போதிலும் பல உள் கிராமங்களுக்கு நிவாரணங்கள் சென்று அடைவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அரசு கொடுத்த ரூபாய் பத்தாயிரத்தில் விலை வாசி உயர்வால் எங்களால் முழுமையாக வீட்டை கட்டி முடிக்க முடியாத நிலையில் உள்ளோம். மேலும் அரசு வழங்கிய நிவாரண தொகையும் போதாது என்று குடிசை வாழ் மக்கள் தெரிவித்தனர். பல்வேறு ஊர்களில் விழுந்த குடிசை வீடுகள் அப்படியே உள்ளது. இவர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும். அரசும் கூடுதலாக உதவி செய்தால் இவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டு எடுக்க முடியும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : inhabitants ,cottage ,Vajaranyam Taluka , Vedaranyam, Ghaja storm, people
× RELATED திருவிக நகர் தொகுதியில் மக்கள்...