×

தஞ்சை பெரிய கோயிலில் பஜனை என்றால் யாருக்கும் அனுமதி அளிப்பீர்களா? நீதிபதிகள் காட்டமான கேள்வி

மதுரை: தொல்லியல் துறை பாதுகாப்பிலுள்ள தஞ்சை பெரிய கோயிலில் பஜனை என்றால் யாருக்கும் அனுமதி அளிப்பீர்களா என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர்.  தஞ்சை மாவட்டம், திருப்பந்துறை சீனிவாசபுரியை சேர்ந்த வெங்கடேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் சார்பில் 2 நாட்கள் தியானம் மற்றும் ேயாகா நிகழ்ச்சி நடத்தவுள்ளனர். இதற்காக கோயில் வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய தொல்லியல் பகுதியான தஞ்சை பெரிய கோயில் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். எனவே, தஞ்சை ெபரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் தியான நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு டிசம்பர் 7ல் விசாரணைக்கு வந்தபோது, தஞ்சை பெரிய கோயில் பகுதியில் தியான நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கோயில் தேவஸ்தான இணை ஆணையர் பரணிதரன், மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் ஆஜராகினர். தொல்லியல்துறை சார்பில், ‘அனுமதி வழங்கப்படவில்லை. தேவஸ்தானம் சார்பில் கடிதம் ெபறப்பட்டது’ என்றனர். அப்போது நீதிபதிகள், ‘‘இதில் தேவஸ்தான அதிகாரி தான் முதல் குற்றவாளி.

இதுபோன்ற தகுதியற்ற அதிகாரிகள் உள்ளனர். பஜனை என எந்த அமைப்பு கேட்டாலும் அனுமதிப்பீர்களா? திட்ட வரைபடம் இல்லாமல் பாரம்பரிய கோயிலில் எப்படி அனுமதித்தீர்கள். கோயிலில் பந்தல் போட எப்படி அனுமதித்தீர்கள்?. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. விவசாய அமைப்பினர் பஜனை பாடி ேபாராட்டத்தில் ஈடுபட அனுமதி கேட்பார்களே? உங்களால் அனுமதிக்க முடியுமா? பல ஆயிரம் பேர் கூடும்போது தொல்லியல் சின்னங்களை எப்படி பாதுகாக்க முடியும்?’’ என சரமாரி கேள்வி எழுப்பினர். பின்னர், மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறிய நீதிபதிகள் விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : anyone ,Judge ,questioning ,Tanjore Big Temple , The great temple of Tanjore, the judges
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...