×

எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் 2ம் நாளாக பார்லி. ஒத்திவைப்பு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவையும், மாநிலங்களவையும் 2ம் நாளாக நேற்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மத்திய அமைச்சர் அனந்த் குமார் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்திவைக்கப்பட்டது. நேற்று முன்தினம் 2வது நாளாக நடந்த கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சிகள் ரபேல் ஒப்பந்தம், ராமர் கோயில் விவகாரம், காவிரி பிரச்னைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.  

இந்நிலையில், நேற்று 3வது நாளாக மாநிலங்களவை கூட்டம் வழக்கம் ேபால் தொடங்கியது. அப்போது, கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் தாக்க முயன்ற சம்பவத்தை எதிர்த்து போரிட்டு உயிரிழந்த 17 பேருக்கு அவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விவாதத்திற்கு எடுத்து க்கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து பட்டியலிடப்பட்டது. அப்போது, அவையின் மையப்பகுதியை நோக்கி காவிரி பிரச்னை குறித்து முழக்கமிட்டபடி தமிழகத்தை சேர்ந்த அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் சென்றனர். அவர்கள் `தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டும்’ என்ற வாசகம் பொருந்திய அட்டைகளை ஏந்தியபடி இருந்தனர். தொடர்ந்து ஆந்திராவை சேர்ந்த சில எம்பிக்கள் தங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டனர். இதனால் அவையின் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களை இருக்கைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். அவர்கள் அதை கேட்காமல் தொடர்ந்து முழக்கமிட்டதால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

 அப்போது, காவிரி பிரச்னை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகள் குறித்தும் அவையில் விவாதிக்க அனுமதிக்கப்படும் என்பதால் இருக்கைகளுக்கு செல்லுங்கள் என வெங்கையா நாயுடு கோரிக்கை விடுத்தார். அதை அவர்கள் கேட்காததால் மாநிலங்களவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.  இதேபோல், மக்களவை கூட்டம் நேற்று வழக்கம் போல் காலையில் தொடங்கியது. அப்போது, கடந்த 2001ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு  அவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கேள்வி நேரம் தொடங்கியது.  காங்கிரஸ், தெலுங்கு தேசம், அதிமுக உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். இதனால், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை 10 நிமிடம் ஒத்திவைத்தார். 11.20க்கு மீண்டும் மக்களவை கூட்டம் தொடங்கியது.

அப்போது அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி பல்வேறு மக்கள் நல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்பதால் அவையை சுமூகமாக நடத்த அனுமதிக்கும் படி உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையை 30 நிமிடம் ஒத்திவைத்தார். இதையடுத்து 12 மணிக்கு மீண்டும் மக்களவை கூடியது. அப்போது இரு உறுப்பினர்களுக்கு மட்டும் பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போது சிவசேனா உறுப்பினர்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி முழக்கமிட்டனர்.  தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் தொடர்ந்து அமளி ஏற்பட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Barley ,opposition , Opposition, Parliament. Adjournment
× RELATED ராமரை அவமதித்துவிட்டதாக...