×

சவுகார்பேட்டை சுற்றுப்புற பகுதிகளில் வீடுகளை உடைத்து தொடர் கொள்ளை: வட மாநில வாலிபர் கைது, நாட்டு துப்பாக்கி, பணம் பறிமுதல்

சென்னை: சென்னை பூக்கடை உதவி கமிஷனர் லட்சுமணன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி அப்பகுதியில் ஒரு வடமாநில வாலிபர் சுற்றித்திரிந்தார். உடனே போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் அவர் மீது, போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது. இதையடுத்து அவரை, காவல் நிலையம் கொண்டு சென்று தீவிரமாக விசாரித்தனர். அதில், ராஜஸ்தானை சேர்ந்த நரேஷ் (36) என்பதும், வீடுகளின் பூட்டை உடைப்பதில் கில்லாடி என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் சவுகார்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, காசி செட்டி தெருவில் பொம்மை, வீட்டு உபயோக பொருட்களை வாங்கி பகல் நேரத்தில் வீடு வீடாக சென்று விற்பனை செய்வார்.

அப்போது பூட்டப்பட்டுள்ள வீடுகளை நோட்டமிட்டு, இரவில் கொள்ளையடிப்பது இவரது வழக்கம். கடந்த வாரம் தங்கசாலை தெருவை சேர்ந்த ஜெயந்தி (45) என்பவரது வீட்டை உடைத்து 2 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்துள்ளார். அதேபோன்று சவுகார்பேட்டை பிகேஜி தெருவில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் கடை நடத்தி வரும் சவுகார்பேட்டையை சேர்ந்த ராஜேஷ், என்பவரது கடையில், நரேஷின் நண்பர் ராஜஸ்தானை சேர்ந்த நீலேஷ் (35) என்பவர் வேலை செய்தார்.  ராஜஸ்தானில் இருந்து கடந்த 8 மாதத்துக்கு முன் நரேஷை, நீலேஷ் அழைத்து வந்தார். பின்னர், அவர் வேலை செய்யும் கடை உரிமையாளர் ராஜேஷின் வீட்டை உடைத்து 3 லட்சம், அதே பகுதியில் உள்ள ஒரு நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 50 கிலோ வெள்ளி பொருட்கள், 200 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.

இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் நீலேஷ் மற்றும் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். ஆனால் கூட்டாளி நரேஷை காட்டி கொடுக்கவில்லை என தெரியவந்தது. இதை அடுத்து நரேஷ் வசித்த வீட்டை போலீசார் சோதனை செய்து, அங்கிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி 10 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

* ஆதம்பாக்கம், பழண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோதண்டராமன் (47) நேற்று முன்தினம் இவரது வீட்டு வாசலில் வைக்கப்பட்டு இருந்த சமையல் காஸ் சிலிண்டரை மர்ம ஆசாமி திருடி சென்றார்.  அதேப் போன்று, ஆதம்பாக்கம் லேபர் கிணறு நெருவை சேர்ந்தவர் சத்தியவாசன் (50). நேற்று காலை இவரது வீட்டு வாசலில் வைக்கப்பட்டு இருந்த காஸ் சிலிண்டரை மர்ம ஆசாமி திருடி சென்றார். இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை பகுதியில் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த வாலிபரை மடக்கிபிடித்து குரோம்பேட்டை போலீசார் விசாரித்தனர். அப்போது நாகல்கேணி, கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்கிம் (19) என்பவர் என்பதும், நிதேஷ்  மற்றும் அர்ஷத் என்பவர்கள் புளியந்தோப்பு பகுதியில் இருந்து கஞ்சா கொண்டு வந்து தன்னிடம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.  இதனையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குரோம்பேட்டை, சி.எல்.சிலைன், 8வது தெருவை சேர்ந்த நிதேஷ் (22), குரோம்பேட்டை, நகல்கேணி, ராமநாதன் தெருவை சேர்ந்த அர்ஷத் (19), குரோம்பேட்டை, ராஜிவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்த அஜய் (19), குரோம்பேட்டை, லட்சுமிபுரம், அண்ணா தெருவை சேர்ந்த சதிஷ் (21), குரோம்பேட்டை, லட்சுமிபுரம், திருவள்ளுவர் தெருவை சேர்ந்த சேதுராஜ் (20) உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 350 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
* பாடியநல்லூர், எம்.ஏ நகர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த குமார் (28) என்பவர் செங்குன்றம்-திருவள்ளூர் சாலை தனியார் திருமண மண்டபம் அருகில் நேற்று முன்தினம் இரவு தனது காரை நிறுத்தி வைத்து இருந்தார். நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. ரோந்து பணியில் சென்ற செங்குன்றம் சப்.இன்ஸ்பெக்டர் மணி, பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கார் முழுவதும் எரிந்து நாசமானது.
* சோழவரம் காரனோடை நாரணம்பேடு பெரியார் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (39). நேற்று மதியம் செங்குன்றம் எஸ்பிஐ வங்கியில் ₹1.80 லட்சம் பணத்தை எடுத்து பைக் பெட்டியில் வைத்தார். செங்குன்றம் காவல் நிலையம் அருகில் உள்ள ஓட்டலில் பைக்கை நிறுத்திவிட்டு மதியம் ஒரு மணிக்கு சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்தார். அப்போது பைக் பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த பணம் திருடு போனது தெரியவந்தது. செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
* எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சரவணன் (38). கூலி தொழிலாளி. இவரது மனைவி நித்யா (32). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை. இதனால் தம்பதி மன வேதனையில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சரவணன் வெளியே சென்றபோது நித்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அதே பகுதியை சேர்ந்தவர் தேசப்பன். மீனவர். இவரது மகன் பிலிப் (21). பி.ஏ முதலாண்டு படித்து வந்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக, தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்தார். நேற்று மதியம் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய பிலிப், ‘‘எனக்கு வாழ பிடிக்கவில்லை’’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் 1 லட்சம் கஞ்சா சிக்கியது
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வளாகத்தில்  ஆட்டோ நிறுத்தம்  உள்ளது. இங்கு நேற்று காலை இரண்டு பைக்குகள் கேட்பாரற்ற நிலையில் கிடந்தன. அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள், இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப்படை போலீசாரிடம் கூறினர். பிறகு ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து, பைக்குகளை சோதனை செய்தனர்.   அப்போது,  10 பொட்டலங்களில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அந்த கஞ்சா பொட்டலங்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த  ரயில்வே பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் பால்ராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கஞ்சா பெட்டலங்கள் ஒப்படைக்கப்பட்டது. இந்த பொட்டலங்களின் மதிப்பு  சுமார் ₹1 லட்சம் ஆகும். இதுகுறித்து சிசிடிவி பதிவுகள் மூலமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chhattarat ,homes ,areas ,state youth ,North , Chauarbet, robbery, northern state youth, arrested, country gun, money laundering
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை