×

கஜா புயல் பாதிப்பு விவகாரம் `இதுதான் அது, அதுதான் இது’ என்று வாழைப்பழ கதையை சொல்லக்கூடாது : தமிழிசைக்கு அமைச்சர் உதயகுமார் பதிலடி

சென்னை: கஜா புயல் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து  நிற்பவர்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டிய நேரம் இது. ஆனால், `இதுதான் அது, அதுதான் இது’ என்று வாழைப்பழ கதையைக் கூறக்கூடாது என்று தமிழிசை சவுந்தரராஜனுக்கு அமைச்சர் உதயகுமார் பதில் அளித்துள்ளார். சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை மையத்தில் நேற்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்முறையாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுசீரமைப்பு மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு என்கிற புதிய திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். இதற்காக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு கட்டிக்கொடுப்பது உள்ளிட்ட மறுவாழ்வு பணிகளை செயல்படுத்துவார்கள். மேலும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் கொடைக்கானல் ஆகியவை கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அரசாணை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சேத மதிப்பீடு கணக்கீடு முதல் கட்டமாக முடிவடைந்துள்ளது. அதன்படி 15,000 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமரை சந்தித்து முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். உடனடி நிவாரணமாக 2,700 கோடி வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் கேட்டுள்ளனர்.

இன்னும் ஒரு சில நாளில் அதுவும் வழங்கப்படும். இதுவரை மத்திய அரசு தந்துள்ளது கஜா புயலுக்கான நிவாரணம் அல்ல. மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத்தொகைதான். கஜா புயல் பாதிப்புக்காக இன்னும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. விரைவில் தருவார்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம். நம்பிக்கைதான் வாழ்க்கை, நிச்சயமாக நமக்கு கொடுப்பார்கள். தமிழக மக்களின் வாழ்வாதாரம் இதில் முக்கியம். இதற்கு மத்திய அரசு நேசக்கரம் நீட்ட வேண்டும். கேரளாவுக்கு 3,048 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதேபோன்று தமிழகத்திற்கும் உடனடியாக உதவ வேண்டும். உலகத்திற்கே சோறுபோட்ட டெல்டா மாவட்ட மக்கள் இன்று வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். அதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டிய நேரம்.மத்திய அரசு கஜா புயலுக்காகத்தான் பணம் வழங்கியதாக பாஜ தலைவர் தமிழிசை சொல்வதாக கூறுகிறீர்கள். இதுதான் அது, அதுதான் இது என்று வாழைப்பழம் கதையாக இருக்கக்கூடாது. இந்த பழம் அந்த பழம் இல்லை. அது வேற, இது வேற. நாங்கள் கேட்பது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு தமிழக அரசு எப்படி நேசக்கரம் நீட்டி அவர்களை பாதுகாத்ததோ, அதற்கு நீங்கள் (மத்திய அரசு) கருணை காட்ட வேண்டிய நேரம் இது. இதில் அந்த கதை, இந்த கதையெல்லாம் சொல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm impact affair ,Kajan ,Uthayakumar , Kajan storm, impact affair,banana story, Minister Udayakumar
× RELATED பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தொடர்...