×

டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் பாதிப்பு ஆய்வறிக்கை வெளியிட தாமதம் ஏன்? : தமிழக அரசு மீது மத்திய அரசு குற்றச்சாட்டு

மதுரை: கஜா புயல் பாதிப்பு தொடர்பான இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தாமதமாவதற்கு தமிழக அரசே காரணம் என மத்திய அரசு வக்கீல், ஐகோர்ட் கிளையில் தெரிவித்தார். கஜா புயல் பாதிப்புகளை சரி செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடுகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன், புதுக்கோட்டை மாவட்டம், புலியூரை சேர்ந்த செல்வராஜூ, திருச்சியை சேர்ந்த தங்கவேல் உள்ளிட்ட பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்திருந்தனர். இதற்கிடையில், மத்திய குழுவின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் ரூ.353.70 கோடி நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரணங்களுக்காக விண்ணப்பிக்க ஒரு வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.   மேலும் மத்தியக்குழுவின் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே நிவாரணத்தொகை வழங்கப்படும் நிலையில், ‘இறுதி அறிக்கை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் ஆகும்’ என கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘மத்திய குழுவின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு சில விளக்கங்களை தமிழக அரசிடம் கோரியிருந்தோம். தமிழக அரசு இன்னமும் விளக்கமளிக்கவில்லை. அதன் காரணமாகவே அறிக்கை தாக்கல் செய்ய காலதாமதம் ஆகிறது,’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், சேத மதிப்பு தொடர்பான மத்தியக்குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் ஆகும் என மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க மத்திய அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டு, வழக்கை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

* கடந்த மாதம் 16ம் தேதி கஜா புயல், டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியது.
* மத்திய குழு வந்து ஆய்வு செய்தது; ஆனால், முழு அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
* இடைக்கால அறிக்கையின் படி 353.70 கோடி நிவாரணத்தொகையை மத்திய அரசு அளித்தது.
* இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தாமதம் ஏன் என்று வழக்கு போடப்பட்டது.
* 17ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Delta Districts ,government ,Tamil Nadu ,Central Government , Delay Dissemination , Geological Storm Damage ,Delta Districts?
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...