×

கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க தென்பெண்ணை ஆற்றில் 25 கோடியில் தடுப்பணை

விழுப்புரம்: கடலில் வீணாக கலக்கும் மழைநீரை சேமிக்கும் வகையில் விழுப்புரம் அருகே ரூ.25 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதனால் 2,200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் நீர் ஆதாரத்தின் முக்கிய பங்காக இருப்பது தென்பெண்ணை ஆறு. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை வழியாக வரும் தென்பெண்ணை ஆறு விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் சுமார் 110 கி.மீ தூரம் கடந்து வங்கக்கடலில் சென்று கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே செல்லும்படியான தடுப்பணைகள் இல்லை.

திருக்கோவிலூர், அணைக்கட்டு, எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு, சொர்ணாவூர் அணைக்கட்டு மட்டுமே உள்ளது. இதனால் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதும், கர்நாடக மாநிலத்தில் கனமழையின்போது ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதனிடையே விழுப்புரம் மாவட்ட எல்லையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனிடையே விழுப்புரம் அருகே தளவானூர் தென்பெண்ணை ஆற்று பகுதியில் மலட்டாறு பிரிந்து செல்வதால் அப்பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

மலட்டாறு ஆக்கிரமிப்பு மற்றும் காலப்போக்கில் இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படாத நிலையில் இருந்த இடமே தெரியாமல் மறைந்து வரும் நிலை உள்ளது. தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் மணல் அள்ளப்பட்டதால் ஆற்றின் உயரமும் 9 மீட்டர் அளவுக்கு சரிந்தது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதும் மேடாகிப்போன மலட்டாற்றில் தண்ணீர் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் கடந்த ஆண்டு பொதுமக்கள், விவசாயிகளே சேர்ந்து அப்பகுதியில் தற்காலிக தடுப்பணை அமைத்து மலட்டாற்றில் தண்ணீரை திருப்பினர். இதனை புதுச்சேரி சபாநாயகரும் பார்வையிட்டு புதுச்சேரி அரசு சார்பில் உதவிக்கரம் நீட்டப்படும் என்று கூறிவிட்டுச் சென்றார்.

ஆனால் தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர்வராத நிலையில் மலட்டாற்றில் தண்ணீர் செல்லவில்லை. இதனிடையே தமிழக அரசு தென்பெண்ணை ஆற்றில் இரண்டு இடங்களில் தடுப்பணை கட்ட நிதிஒதுக்கீடு செய்து ஆணையிட்டது. விழுப்புரம் மாவட்டம் தளவானூர் அருகே ஒரு தடுப்பணையும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் பகுதியில் மற்றொரு தடுப்பணையும் அமைக்க அரசு உத்தரவிட்டிருந்தது. விழுப்புரம் அருகே தளவானூரில் ரூ.25.35 கோடி மதிப்பீட்டில் சுமார் 400 மீட்டர் நீளமும், 3.1 மீட்டர் உயரத்தில் இந்த தடுப்பணை அமைக்கப்பட உள்ளது.

இரு கரைகளிலும் 800 மீட்டர் தொலைவுக்கு தடுப்புச்சுவரும், ஆற்றின் தரைப்பகுதியிலிருந்து 10 அடி உயரத்திற்கு அணைக்கட்டு சுற்றுச்சுவரும் கட்டமைக்கப்பட உள்ளது. இந்த அணைக்கட்டு கட்டி முடிக்கப்பட்டால் தென் பெண்ணை ஆற்றில் வரும் நீர் அணைக்கட்டு வழியாக உயர்ந்து மலட்டாற்றில் தண்ணீர் பாய்ந்து ஓடும். இதனால் 2,200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் எனதிரிமங்கலம் வாலாஜா வாய்க்கால் வழியாகவும் தண்ணீர் செல்லும். இந்த அணைக்கட்டின் இருபுறங்களிலும் கதவணைகள் அமைக்கப்படுவதால் தண்ணீரை தேக்கி வைத்தும், தேவையின்போது மலட்டாறு, உபரி வாய்க்கால்கள் மூலம் திருப்பி அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sea ,riverbank , Water, tenpennai, barrage
× RELATED குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப்...