×

தூது வந்த மாஜி எம்எல்ஏக்கள் கரூரில் தொடர்ந்து முகாம்: தினகரன் சமரசம் ஏற்க செந்தில்பாலாஜி மறுப்பு

கரூர்: அமமுகவில் இருந்து வெளியேறுவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் செந்தில்பாலாஜி, தினகரனின் சமரசத்தை ஏற்க மறுத்து வருகிறார். இதனால் அவரை சமாதானப்படுத்த வந்த மாஜிக்கள் கரூரில் முகாமிட்டுள்ளனர். சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் தகுதி நீக்கம் செல்லும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என செந்தில்பாலாஜி உள்ளிட்ட தகுதி நீக்க எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனிடம் கூறியதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. தினகரனின் இந்த முடிவில் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு உடன்பாடில்லை. மேலும், 18 பேரும் மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. செலவுக்கு அவர்களிடம் பணமும் இல்லை. எனினும் தினகரனோ, தேர்தலை சந்திப்பதில் குறியாக உள்ளார்.

ஆனால் செலவுக்கு பணமும் இல்லை என்று கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பல மாஜிக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். ஆனால், தான் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும். மற்றவர்களின் ஆலோசனை தேவையில்லை என்று தினகரன் கூறி வருவதாக கூறப்படுகிறது.இதனால், அமமுகவில் இருந்து விலக செந்தில்பாலாஜி முடிவு செய்தார். இதற்காக கரூரில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, பலர் நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் ஆதரிக்கத் தயார் என்று தெரிவித்துள்ளனர். பலர் திமுகவில் சேருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், செந்தில்பாலாஜியை முன்னாள் அமைச்சர் பழனியப்பன் சந்தித்துப் பேசினார். செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக 4 மாவட்டச் செயலாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், செந்தில்பாலாஜிக்கு பின்னால் பல நிர்வாகிகள் செல்ல இருப்பது தெரிந்து தினகரன் அதிர்ச்சி அடைந்தார். இதனால் செந்தில்பாலாஜியை சமாதானப்படுத்த முடிவு செய்தார். இதற்காக, தகுதி நீக்கம் செய்யப்பட்ட தஞ்சை எம்எல்ஏ ரெங்கசாமி நேற்றுமுன்தினம் கரூர் வந்தார். செந்தில்பாலாஜி ஆலோசனை நடத்தும் ஒரு கம்பெனியில் காத்திருந்தார். ஆனால் ரெங்கசாமி வந்திருக்கும் தகவல் தெரிந்ததும், அவர் அங்கு வராமல் தவிர்த்து விட்டார். பல மணி நேரம் காத்திருந்த ரெங்கசாமி, ஏமாற்றத்துடன் திரும்பினார்.

அவர் கரூரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியுள்ளார். அதேநேரத்தில் செந்தில்பாலாஜியை சந்திக்க, தகுதி நீக்க எம்எல்ஏக்களான சோளிங்கர் பார்த்திபன், அரூர் முருகன், குடியாத்தம் எம்எல்ஏவின் கணவர் பத்மநாபன், அமமுக தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜ் ஆகியோரும் அதே லாட்ஜில் வந்து தங்கினர். அனைவரும் நேற்று ஆலோசனை நடத்தினர். செந்தில்பாலாஜியை எப்படியாவது சமாதானம் செய்யுங்கள் என்று இவர்களிடம் தினகரன் கூறியிருப்பதாக கூறப்படுகிறது. தினகரனைப் பொறுத்தவரை தன்னை ஒருவர் எதிர்த்து விட்டால், சமாதானம் அடைந்தாலும், பின்னர் ஒரு நாள் கண்டிப்பாக பழிவாங்குவார் என்று தேனி மாவட்ட முன்னாள் நிர்வாகிகள் கூறுகின்றனர். இதனால்தான் செந்தில்பாலாஜி, சமாதானத்தை ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், லாட்ஜில் இருந்து ரங்கசாமி மட்டும் வெளியே வந்தார். அவரிடம் செந்தில்பாலாஜி விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இப்படியெல்லாம் நீங்கள் கேள்வி கேட்டால் நான் என்ன சொல்வது சொல்லுங்கள். அதுமாதிரி எந்த சப்ஜெக்டும் இல்லை. இல்லாத ஒரு சப்ஜெக்ட்டுக்கு என்ன சொல்வது, எவ்வளவோ ஆதாரம் இல்லாத விஷயங்கள் எல்லாம் வரும். அதற்கெல்லாம் தேவையில்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருக்க இயலாது. நீங்கள் நினைப்பது மாதிரியெல்லாம் எதுவும் கிடையாது.

செந்தில்பாலாஜி போனை எடுக்காமல் ஸ்விட்ச்ஆப் செய்து வைத்துள்ளாரே என நிருபர்கள் கேட்ட போது, வேலை நிறைய இருக்கும். பல காரணங்கள் இருக்கும் என்றார். மேலும் 4 எம்எல்ஏக்கள் மாறி வந்ததற்கு என்ன காரணம் என கேட்ட போது. அவர்கள் எல்லாம் எப்போதுமே அவரை சந்தித்து பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர். எல்லோரும் மாதத்திற்கு இரண்டு, மூன்று முறை சந்தித்துக் கொண்டுதான் உள்ளனர் என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Majestic MLAs ,Karur ,Senthilalaji ,Dinakaran , Majhi MLAs, Dinakaran, Senthilapalaji
× RELATED செங்குந்தபுரம் செல்லும் சாலையில்...