×

புதிய கலங்கரைவிளக்க கட்டுமானத்துக்காக தனுஷ்கோடியில் நிலத்தடி ஆய்வு துவக்கம்

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் மத்திய அரசால் பல கோடி ரூபாய் செலவில் புதிய கலங்கரை விளக்கம் விரைவில் கட்டப்பட உள்ளது. இதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நேற்று நிலத்தடி ஆய்வு பணிகள் துவங்கியது.பாக் ஜலசந்தி கடலில் 1964ல் வீசிய கடும் புயலால் ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி நகரமே கடலில் மூழ்கி அழிந்தது. தற்போது 300க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வரும் தனுஷ்கோடியில் பல கோடி ரூபாய் செலவில், கலங்கரை விளக்கம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தனுஷ்கோடி நகரம் உருவானபோது பலதரப்பட்ட நிர்வாக கட்டிடங்கள், குடியிருப்புகள் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் கப்பல் மாலுமிகள், படகில் செல்லும் மீனவர்களுக்கு, கடற்கரை பகுதிகளை அடையாளம் காட்டும் கலங்கரை விளக்கம் மட்டும் இங்கு அமைக்கவில்லை.

பாம்பனில் மட்டுமே கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. தற்போது தனுஷ்கோடியில் புதிதாக கலங்கரை விளக்கம் அமைக்க மத்திய அரசின் கலங்கரை விளக்கங்கள் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தனுஷ்கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் இடதுபுறத்தில் வடக்கு மற்றும் தெற்கு கடற்கரையை மையப்படுத்தி சுமார் அரை ஏக்கர் நிலம் வருவாய்த்துறையால் தேர்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒதுக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது. கலங்கரை விளக்கம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நேற்று நிலத்தடி மண் ஆய்வுப்பணி துவங்கியது. நிலத்தில் 3 அடி ஆழம் தோண்டினாலே தண்ணீர் ஊற்றெடுக்கும் பகுதியாக இருப்பதால், நில உறுதித்தன்மையை அறிந்து கொளளும் வகையில் நேற்று தனியார் நிறுவனத்தால் நிலத்தடி மண் ஆய்வுப்பணி துவங்கியது. துளையிடும் இயந்திரத்தினால் குறிப்பிட்ட இடத்தில் 20 மீட்டர் ஆழம் வரை நிலத்திற்கு கீழே மணல் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளது. இதன்பின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் சதுர வடிவில் கலங்கரை விளக்கம் கட்டப்பட உள்ளது.
மேலும் அலுவலர், பணியாளர் குடியிருப்பும் கட்டப்படுகிறது. தனுஷ்கோடியில் அமையும் கலங்கரை விளக்கத்தின் மேலே சுற்றுலாப்பயணிகள் பார்வையிடும் வகையில் கட்டப்பட உள்ளது. இதனால் தனுஷ்கோடி வரும் சுற்றுலாப்பயணிகள் கலங்கரை விளக்கத்தின் மேலே சென்று தனுஷ்கோடியின் முழு அழகையும் பார்த்து ரசிக்கலாம்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : construction ,Dhanushkodi ,lighthouse , new lighthouse, construction, underground , Dhanushkodi
× RELATED கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க...