புகார் கொடுக்க சென்ற மூதாட்டியை தாக்கிய இன்ஸ்பெக்டருக்கு 10 ஆயிரம் அபராதம்

சென்னை: புகார் கொடுக்க காவல் நிலையத்துக்கு வந்த மூதாட்டியை தாக்கிய வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 10 ஆயிரம் அபராதம் விதித்து மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் வாசுகி (61). இவர், குடியிருக்கும் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக காசிமேடு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன் மீது நடவடிக்கை இல்லாததால் காசிமேடு சட்டம் ஒழுங்கு பிரிவில் புகார் அளித்தார். தொடர்ந்து புகார்கள் அளித்தும் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காசிமேடு சட்டம் ஒழுங்கு பிரிவில் மீண்டும் புகார் அளிக்க சென்ற போது காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி, தரக்குறைவான வார்த்தைகளால் பேசி, வயதானவர் என்றும் பார்க்காமல் அடித்துள்ளார். மேலும் புகார் அளிக்க இனி காவல் நிலையத்துக்கு  வரக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி துரை ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, காவல் ஆய்வாளர் மூதாட்டியை தாக்கியது உறுதியானது. அதனால்  சிதம்பர மூர்த்திக்கு 10 ஆயிரம் அபராதம் விதித்து 4 வாரத்தில் வழங்க உத்தரவிட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சட்ட நடவடிக்கைகள் பாயும் வரி ஏய்ப்பு...