×

நூற்றாண்டு பழமை வாய்ந்த ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணிக்கு 36 கோடி ஒதுக்கீடு: பிப்ரவரியில் பணி தொடங்க திட்டம்

சென்னை: நூற்றாண்டு பழமையான ஹூமாயூன் மகால் கட்டிடத்தை பழமை மாறாமல் புனரமைக்கும் பணிக்காக அரசு ரூ.36 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள ஹூமாயூன் மகால் 200 ஆண்டுகள் பழமையானது. முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் கடந்த 2013 செப்டம்பர் மாதம், மகாலின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டு, மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.
இதை தொடர்ந்து, கட்டிடத்தை சீரமைக்கும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்க பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 2014 ஜனவரி மாதத்தில் மூன்று பேர் கொண்ட குழு  நியமிக்கப்பட்டது.

இந்த குழு, ஆய்வு செய்து ஹூமாயூன் மகாலை சீரமைப்பதற்கு உண்டாகும் செலவு விவரங்களை திட்ட அறிக்கையாக தயார் செய்து தமிழக அரசிடம் அளித்தது. அப்போது ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அரசு இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இந்நிலையில், ஹூமாயூன் மகால் கட்டிடத்தின் உட்பகுதி இடிந்து, கட்டிடம் பலத்தை இழந்து ஒட்டுமொத்தமாக பயன்படுத்த முடியாத நிலை உருவானது. எனவே, கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அடுக்குமாடி கட்டுவதற்கு பொதுப்பணித்துறை தீர்மானித்தது. ஆனால், இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால், புதிய கட்டிடம் கட்டும் திட்டத்தை பொதுப்பணித்துறை கைவிட்டது.

இதை தொடர்ந்து, ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணியை சுற்றுலாத் துறை நிதி மூலம் மேற்கொள்ள பொதுப்பணித்துறை முடிவு செய்தது. இதற்காக, சுற்றுலாத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால், தற்போது நிதி இல்லை எனக்கூறி சுற்றுலாத்துறை கைவிரித்ததால்  ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணிகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், ஹூமாயூன் மகாலை பழமை மாறாமல் புனரமைப்பதற்கு ரூ.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதை தொடர்ந்து ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணிக்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, நிதித்துறையின் ஒப்புதலுக்காக பொதுப்பணித்துறை அனுப்பி வைத்தது.

 தற்போது, தமிழக அரசு ரூ.36 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.33 கோடி புனரமைப்பு பணிக்கும், ரூ.3 கோடி மின்சாதன பணிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணிக்கு இந்த மாதம் இறுதியில் டெண்டர் விடப்படும். ஒப்பந்த நிறுவனம் மூலம் வருகிற பிப்ரவரியில் பணிகள் தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Humayun Mahal , ‘Humayun Maha‘
× RELATED 250 ஆண்டுகள் பழமையான ஹூமாயூன் மஹாலில்...