இலங்கை அரசியல் குழப்பத்திற்கு அந்நிய சக்திகளே காரணம்: அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு

கொழும்பு: அந்நிய சக்திகளால், தான் மிரட்டப்பட்டதாக கூறியிருக்கும் இலங்கை அதிபர் சிறிசேனா, தற்போதைய அரசியல் குழப்பங்களுக்கு காரணம் அந்நிய சக்திகளே என்றும் குற்றம்சாட்டி உள்ளார். இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயை நீக்கிய அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக மகிந்தா ராஜபக்சேவை நியமித்தார். இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 26ம் தேதியிலிருந்து, இலங்கையில் பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. ராஜபக்சேவுக்கு பெரும்பான்மையை திரட்ட, நாடாளுமன்றத்தை முடக்கி வைத்து சிறிசேனா உத்தரவிட்டார். இது அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும் என விக்ரமசிங்கே ஆதரவு எம்பிக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது சொந்த ஊரான பொலன்னருவாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சிறிசேனா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அந்நிய சக்திகளுக்கு இடம் கொடுக்காமலும், அவர்களின் மிரட்டல்களுக்கு பயப்படாமலும் தேசக் கொள்கைகளின்படி செயல்படுவதால், அந்த அந்நிய சக்திகள் மிகப்பெரும் சவாலாக இருக்கின்றன. பழைய ஏகாதிபத்தியத்தின் நிழல் நம் வழியில் குறுக்கிடுகிறது. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு காரணமே அந்நிய சக்திகள்தான்.

உள்நாட்டு சிந்தனைக்கும், வெளிநாட்டு சிந்தனைகளுக்கும் இடையிலான மோதலே அரசியல் குழப்பத்திற்கு வழி வகுத்துள்ளது. இவ்வாறு கூறி உள்ளார்.

அந்நிய சக்திகள் என அவர் எந்த நாட்டையும் குறிப்பிட்டு கூறவில்லை. அதே நேரத்தில் இந்தியாவின் ‘ரா’ உளவு அமைப்பு தன்னை கொல்ல திட்டமிட்டிருந்ததாக சிறிசேனா சமீபத்தில் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>