×

மத்திய அரசு பச்சைக் கொடி 7 தமிழர்கள் விடுதலையை கவர்னர் அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432, 435 ஆகிய பிரிவுகளின் கீழ் விடுதலை செய்ய 2014ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து, ராஜிவ்காந்தி கொலையின் போது உயிரிழந்த வேறு சிலரின் உறவினர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். பேரறிவாளன் உள்ளிட்ட சிலருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72 மற்றும் 161வது பிரிவுகளின் கீழ் ஏற்கனவே தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்துவிட்ட மத்திய அரசு, 7 தமிழர்களுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின் கீழ் எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என்பதால் இந்த வழக்கு தேவையற்றது, அவர்களின் கோரிக்கை காலாவதியாகிவிட்டதாகக் கருதி தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

7 தமிழர் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 2014ம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்த அப்பாஸ் என்பவர் உள்ளிட்ட சிலர் கடந்த செப்டம்பர் 26ம் தேதி தமிழக ஆளுனர் பன்வாரிலாலை சந்தித்து, ‘உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் வரை பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக்கூடாது’ என்று கோரினர். அதைத் தொடர்ந்து 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக முடிவெடுப்பதை தமிழக ஆளுனர் தாமதப்படுத்தி வந்த நிலையில்தான், மத்திய அரசு இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை ஏற்று 7 தமிழர்கள் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் எந்த நேரமும் தள்ளுபடி செய்யலாம். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அப்பாஸ் உள்ளிட்ட சிலரின் வழக்குகளைக் காரணம் காட்டி 7 தமிழர்கள் விடுதலையை தாமதப்படுத்தி வந்த ஆளுனர், மத்திய அரசின் புதிய நிலைப்பாட்டுக்குப் பிறகு என்ன செய்யப் போகிறார்? என்பதுதான் இப்போது விடை காணப்பட வேண்டிய வினாவாகும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலைக்கு எதிரான அனைத்து முட்டுக்கட்டைகளும் விலகி விட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்வதற்கான ஆணையை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,release ,Ramadoss ,Tamil Nadu , Central Government, Governor, Ramadoss, rajiv gandhi murder case
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்