×

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி, தொகுதி பங்கீடு பற்றி பேச காங்கிரசில் 6 பேர் குழு: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: “நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச காங்கிரசில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக” திருநாவுக்கரசர் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள், பிரிவு மற்றும் துறைகளின் மாநில தலைவர்கள் கூட்டம் சத்திய மூர்த்திபவனில் நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தணிகாசலம், தாமோதரன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ.ராஜசேகரன், அரும்பாக்கம் க.வீரபாண்டியன், ரூபி மனோகரன், இளைஞரணி தலைவர் அசன் ஆரூண், மீனவரணி தலைவர் கஜநாதன், சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாட்ஷா, மகளிரணி தலைவி ஜான்சி ராணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி வருகிற 16ம் தேதி வருகிறார். நான் தலைவராக பதவி ஏற்ற பின் முதல்முறையாக சோனியா காந்தி தமிழகம் வருகிறார். அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க காங்கிரசில் உள்ள 72 மாவட்டங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோடி அரசை வீழ்த்தவும், அகற்றவும் தேசிய, மாநில தலைவர்கள் கலந்துகொண்ட எதிர்க்கட்சி கூட்டம் ராகுல்காந்தி தலைமையில் நடந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நடத்தப்பட்ட கூட்டம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலின் போது இதுவே கூட்டணியாக வரும். பிரதமராக ராகுல்காந்தி வருவார்.

கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் 6 பேர் கொண்ட குழு காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கூடி பேசி கூட்டணி குறித்து பேசும். அதன் பின்னர் கூட்டணி குறித்து ராகுல்காந்தி அறிவிப்பார். இந்தியா முழுவதும் மோடி அலை ஓய்ந்து விட்டது. ராகுல்காந்தி அலை வீசத் தொடங்கியுள்ளது. 5 மாநில தேர்தல் சர்வே இதைத்தான் எடுத்து காட்டியுள்ளது. வாக்குறுதி எதையும் மோடி நிறைவேற்றவில்லை. இதுவரை 16 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அதில் 3 தொகுதிகளில் மட்டுமே பாஜ வெற்றி பெற்றுள்ளது. இந்த தோல்வி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். மோடியை வீழ்த்த தகுதியான தலைவர் ராகுல் காந்திதான். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : alliance ,constituent assembly ,Congress ,interview ,election ,Thirunavukkarar , Parliamentary election, Congress, Thirunavukkarasar
× RELATED இது சாதாரண தேர்தல் அல்ல, நமது ஜனநாயகம்...