×

‘நீட்’ பயிற்சிக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு ஒரு ரூபாய்கூட அரசு செலவிடவில்லை: அமைச்சர் பதில்

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்க அரசு தரப்பில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அதிலிருந்து ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் அளித்த பேட்டி: ஜனவரி மாதம் முதல் அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் தடை செய்யப்படுகிறது.கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் எப்படி செயல்பட வேண்டும், ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் சேர்க்கை எப்படி இருக்கிறது, மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள் குறித்தும், மாணவர்கள் ஆசிரியர்கள் விகிதாச்சாரம்  எப்படி இருக்கிறது என்பது குறித்தும் ஆய்வு செய்ய கூட்டம் நடக்கிறது. அரையாண்டுத் தேர்வு கேள்வித்தாள் திருடு போனதாக வெளியான தகவல் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், கேள்வித்தாள் வைக்கப்பட்டு இருந்த அறையின் கதவு உடைக்கப்பட்டுள்ளது. அதை உடைத்த மாணவர்கள்  குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அங்கு எந்த கேள்வித்தாளும் திருடு போகவில்லை.

பள்ளிகளை மூடும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை. எல்லா பள்ளிகளும் இயங்கும். பள்ளிகளில் அங்கன்வாடிக் குழந்தைகள் இருக்கிறார்கள். 33 பள்ளிகளில் மாணவர்கள் இல்லை. 1324 பள்ளிகளில் 9க்கும்  குறைவான மாணவர்கள் உள்ளனர். எந்த கட்சியினராக இருந்தாலும் இவற்றை ஆய்வு செய்து பள்ளிகள் இயங்குவது குறித்து நல்ல கருத்துகளை சொன்னால்அதை செயல்படுத்துவோம். ்அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் நீட் தேர்வில் பயிற்சி பெற்றவர்களில் வெறும் 4 மாணவர்கள்தான் அரசு மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாகவும், அதற்காக ரூ.20 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் அறியும் சட்டத்தில் தகவல் பெறப்பட்டுள்ளதாக கூறுவது தவறு. நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க செலவுக்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் அதில் இருந்து ஒரு ரூபாய் கூட செலவு செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக, 3162 மாணவர்களுக்கு 9 தனியார் கல்லூரிகள் தொடர்ந்து 25 நாட்கள் பயிற்சி அளித்தன. இதற்காக அந்த கல்லூரிகள் ரூ.3 கோடியே 50 லட்சம் செலவிட்டுள்ளனர்.

மேலும், நீட் தேர்வுக்கான பயிற்சி குறுகிய காலத்தில் தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டுக்கான பயிற்சி தற்போது தொடங்கியுள்ளதால், அடுத்த ஆண்டில் மருத்துவ படிப்பில் குறைந்தபட்சம் 500 மாணவர்களாவது சேர்க்கப்படுவார்கள். இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு பயிற்சி பெற 26 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். 11 ஆயிரம் பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரையில் நீதிமன்ற வழக்குகள்தான் தடையாக உள்ளது. அதனால் தற்காலிகமாக ரூ.7500 ஊதியத்தில் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. வட மாவட்டங்களில் 5472 ஆசிரியர் பணியிடங்கள் பற்றாக்குறை உள்ளது. தென் மாவட்டங்களில் 6 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக உள்ளன. வழக்குகள் இல்லை என்றால் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Minister ,Neat , 'Neet' training, government, Minister sengottaiyan
× RELATED விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி...