×

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஎச்பி தொண்டர்கள் குவிந்ததால் ராம் லீலா மைதானம் குலுங்கியது: போராட்டம் ஓயாது என தகவல்

புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அவசர சட்டம் இயற்றக்கோரி  விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய பேரணியில் டெல்லி ராம்லீலா மைதானம் நேற்று  குலுங்கியது.அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை வலியுறுத்தி  குருகிராம், காஜியாபாத், கவுதம்  புத்தா நகர், பாக்பத் மற்றும் மீரட் மாவட்டங்களில் இருந்து விஎச்பி தொண்டர்கள் நேற்று காலை டெல்லியில் குவிந்தனர். லட்சக்கணக்கில் தொண்டர்கள்  குவியக்கூடும் என்பதால், டெல்லி ராம்லீலா மைதானம்  நோக்கிச் செல்லும் சாலைகளில் போக்குவரத்துக்கு தடை அறிவிக்கப்பட்டது.  உயரமான  கட்டிடங்களின் மாடியில் துப்பாக்கி ஏந்திய  போலீசார் தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டனர். பகல்  நேரத்துக்குள் மைதானம் நிரம்பியதால், மைதானத்தின் அனைத்து வாயில்களையும்  மூடினர்.

போலீசாரின் பூட்டு நடவடிக்கை, அங்கு  குவிந்த விஎச்பி தொண்டர்களுக்கு ஆத்திரமூட்டியது. அதையடுத்து அவர்கள்  போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால், பதற்றம் தொற்றியது. அடுத்தாண்டு  நடைபெற  உள்ள மக்களவை தேர்தலுக்கு முந்தையதாகவும், மத்திய பாஜ அரசின் இறுதி  தொடராகவும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை (செவ்வாய்கிழமை)  தொடங்க உள்ளது. எனவே, ராமர் கோயில் கட்டுவதற்கு  நாடாளுமன்றத்தில் அவசர  சட்டம் இயற்றப்பட வேண்டும் என இந்து அமைப்புகள் முனைப்பாக உள்ளன.ராமர் கோயில் விவகாரத்தில் மத்திய பாஜ அரசை கண்டித்து ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் ஜோஷி கூறுகையில், ‘‘அயோத்தியில்  ராமர் கோயில் கட்டப்படும் என அதிகாரத்தில் இன்று இருப்பவர்கள் உறுதி  அளித்தனர்.
மத  உணர்வுகள் அவர்களுக்கும் நன்றாக தெரியும். நாங்கள் ஒன்றும் அவர்களிடம்  பிச்சை எடுக்கவில்லை. எங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம். ‘ராம  ராஜ்யம்’ வேண்டும் என்கிறது நாடு. நீதித்துறை மீது நம்பிக்கை  இழக்கும் ஒரு  நாடு, வளர்ச்சி பாதையில் எந்த விதத்திலும் முன்னேற முடியாது. மக்களின்  உணர்வுகளை உச்ச நீதிமன்றமும் புரிந்து கொள்ள வேண்டும். அயோத்தி விவகாரத்தில், அவசர சட்டம்  பிறப்பிப்பதுதான் ஒரே தீர்வு.  வாக்குறுதி நிறைவேறும் வரை எங்கள் போராட்டம்  ஓயாது’’ என்றார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ram Leela Stadium ,volunteers ,Ram Temple ,VHP ,Ayodhya , Insisted, building, Ram Temple, Ayodhya
× RELATED கேரளாவில் கோயில் திருவிழாவின்போது...