×

ஆவடி முதல் கன்னிகாபுரம் வரை ஆக்கிரமிப்பின் பிடியில் நீர்வரத்து கால்வாய்கள்: வீடுகளில் வெள்ளம் புகும் அபாயம்

ஆவடி: ஆவடி பகுதியில் இருக்கும் நீர்வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளது. இதனால் மழைக்காலங்களில் குடியிருப்புகளில் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 1 முதல் 6 பிளாக்குகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.  இந்த குடியிருப்பில் தீயணைப்பு நிலையம், மகளிர் காவல் நிலையம், மாவட்ட கிளை நூலகம், 3தனியார் பள்ளிகள், 2 அரசு பள்ளிகள், 3 தனியார் மருத்துவமனைகள், கோயில், சர்ச், மசூதி மற்றும் வணிக வளாகங்கள்  உள்ளன. இந்த குடியிருப்பை ஒட்டி உள்ள பருத்திப்பட்டு ஏரியின் நீர்வரத்து மற்றும் உபரிநீர் கால்வாய் பல இடத்தில் ஆக்கிரமிப்பாளர் பிடியில் சிக்கி உள்ளது. இதனால் மழை காலங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுவதால் குடியிருப்புவாசிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பருத்திப்பட்டு ஏரி நிறைந்து வரும் உபரி நீர் கால்வாய், ஆவடி ராணுவ பகுதியில் இருந்து வரும் நீர்வரத்து கால்வாய் ஆகியவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

மேலும், விளிஞ்சியம்பாக்கம் ஏரி உபரிநீர் கால்வாய் காமராஜர் நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சலவையாளர் குடியிருப்பு பகுதிகளில் 40அடி கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு 5 முதல் 10 அடியாக உள்ளது. அது போல, ஆவடி ராணுவ பகுதியிலிருந்து வரும் நீர்வரத்து கால்வாய், புதிய ராணுவ சாலை பகுதியில் இருந்து கன்னிகாபுரம் வரை ஆக்கிரமிக்கப்பட்டு 6 முதல் 10 அடியாக உள்ளது. இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்திலும் கால்வாயில் மழைநீர் செல்ல முடியாமல் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் புகுந்து விடுகிறது. குறிப்பாக, 2015ம் ஆண்டு மற்றும் கடந்த ஆண்டும் பெய்த மழையால் குடியிருப்புகள் முழுவதும் தண்ணீரில் மிதந்தது. இதனால் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் படகு மூலம் வீட்டை விட்டு உயிர் பிழைத்தால் போதும் என வெளியேறினர். இவர்கள், பல நாட்கள் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

இதையடுத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரி பராமரிக்க வேண்டும் என வீட்டு வசதி குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அனுப்பினர். ஆனால், இதுவரை அதிகாரிகள் அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். தற்போது, உயர்நீதிமன்றம் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்ற உத்தரவிட்டு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் இணைந்து பருத்திப்பட்டு, விளிஞ்சியம்பாக்கம் ஏரிகளுக்கு செல்லும் நீர் வரத்து மற்றும் உபரி நீர் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற எடுக்க வேண்டும்’’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Houses , Avadi, Kannikapuram, Water Canals, Flood Risk
× RELATED மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா...