போலந்தில் நடைபெறும் ஐ.நா. காலநிலை மாநாட்டில் பசுமை தாயகம் பங்கேற்கும்: ராமதாஸ் அறிக்கை

சென்னை: போலந்தில் நடைபெறும் ஐ.நா. காலநிலை மாநாட்டில் பசுமை தாயகம் அமைப்பு பங்கேற்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: காலநிலை மாற்ற பேரழிவுகளை தடுக்கவும், அதிகரித்துவரும் இயற்கை பேரிடர்களை சமாளிக்கவும் உறுதியான விதிமுறைகளை உருவாக்குவதற்காக போலந்து நாட்டில் கூடியுள்ள ஐநா காலநிலை மாநாட்டில் பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் அருள் தலைமையிலான குழுவினர் பங்கேற்கின்றனர். பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை எதிர்கொள்வதற்கான ஐநா காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவை மூலம் 2015ம் ஆண்டில் பாரிஸ் காலநிலை உடன்படிக்கை எட்டப்பட்டது. அதன்படி வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைப்பது என்றும், 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் அதனை கட்டுப்படுத்த முயற்சிப்பது என்றும், உலகின் 180 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

பாரிஸ் காலநிலை உடன்படிக்கை 2020ம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. 2018ம் ஆண்டிற்குள் இதற்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்பது ஐநா விதிமுறை ஆகும். இதற்கான ஐநா காலநிலை மாநாடு போலந்தின் கடோவைசில் டிசம்பர் 2-14 வரை நடக்கிறது. உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும், 190 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் இந்த மாநாட்டில் ஐநா அவையின் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்பான பசுமைத் தாயகம் அமைப்பு கலந்துகொள்கிறது.  இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: