×

எம்டிசி டிரைவர், கண்டக்டர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ‘ஓவர் டைம்’ கிடையாது: தொழிற்சங்க நிர்வாகிகள் அதிர்ச்சி

சென்னை: ‘எம்டிசி’யில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு இனிமேல் ஞாயிற்றுக்கிழமைகளில் ‘ஓடி’(ஓவர் டைம்) கிடையாது என நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) சார்பில் 34 பணிமனைகள் மூலம் 3,439 பஸ்கள், 680 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. அலுவலகம், பள்ளி, கல்லூரி என பல்வேறு இடங்களுக்கு தினசரி 30 லட்சத்திற்கும்  மேற்பட்டோர் இதில் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக காலை 8 மணி முதல் 10:30 மணி வரையிலும், மாலை 6 முதல் இரவு 9 மணி வரையிலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால் சம்மந்தப்பட்ட பஸ்களை  இயக்கும் டிரைவர்களும், நடத்துனர்களும் நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதையடுத்து அவர்கள் கூடுதலாக பணியாற்றும் நேரத்திற்கு தகுந்தார்போல் ₹100 முதல், ₹250 வரை ‘ஓடி’ வழங்கப்பட்டு வருகிறது.வாரத்தின் அனைத்து நாட்களுக்கும் இவ்வாறு ‘ஓடி’ வழங்கப்பட்டு வந்தது. ஆனால், ஞாயிற்றுக் கழமைகளில் ேபாக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும். இதனால் நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்திலேயே பணியை  டிரைவரும், கண்டக்டரும் முடித்துக்கொள்ள இயலும்.

ஆனால், பலமான தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பின்புலன் கொண்டவர்கள் ஞாயிற்றுக் கிழமை கூட கூடுதல் நேரம் பணி செய்வதாக கூறி, ‘ஓடி’ பணத்தை வாங்கி வந்தனர். இதனால் நிர்வாகத்திற்கு இழப்பு  ஏற்பட்டது. இதை தடுக்கும் விதமாக ஞாயிற்றுக் கிழமை ‘ஓடி’ வழங்கப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இத்தனை நாட்களாக நிர்வாகத்தை ஏமாற்றி பணம் பார்த்து வந்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை மேலாண் இயக்குனர், அனைத்து பணிமனைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது:தினசரி போக்குவரத்து நெரிசல், இதர இடையூறுகள் காரணமாக பஸ்களை அட்டவணைப்படி உரிய நேரத்தில் இயக்க முடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு பணிமனைகளில் தாமத இயக்க  முடிவின்படி ‘ஓடி’ தொகை, டிரைவர், கண்டக்டர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில், ஞாயிற்றுகிழமைகளில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகவும் குறைவாகவும், எந்தஒரு இடையூறும் இல்லாமல் பஸ்கள் இயக்கும்  நிலை உள்ளது.இதனால் பல பஸ்கள் உரிய நேரத்திற்கு முன்பாகவே பஸ் நிலையங்கள், நிறுத்தங்கள் வந்து, செல்வது கண்டறியப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு டிச., 1 முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் எந்த ஒரு  பணிமனைகளிலும் தாமத இயக்கம் தொடர்பாக டிரைவர், கண்டக்டர்களுக்கு ‘ஓடி’ வழங்கப்படுவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.இதை பின்பற்றாமல் தன்னிச்சையாக எந்த ஒரு பணிமனைகளிலும் தாமத இயக்கம் தொடர்பாக ‘ஓடி’ வழங்கப்படுவது கண்டறியப்பட்டால், அதற்கு அந்தந்த கி மேலாளர், உதவி கிளை மேலாளர்களே முழுபொறுப்பாக  கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Controllers , MTC Driver, Controllers Sunday ,'overtime',shocked, union executives
× RELATED மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில்...